இந்திய இலங்கை மீனவர்களிடையே உடன்பாடு?

இலங்கை-இந்திய மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இருநாட்டு மீனவர்களுகக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Image caption இலங்கை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கூட்டம்.

இந்த முயற்சியை வரவேற்றுள்ள இலங்கை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக பல வருடங்களாக முயற்சிகளை மேற்கொண்டிருந்த தலைவர்களை இந்தப் பேச்சுக்களில் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றது.

இந்தியத் தரப்பினருடன் ஏற்கனவே பலசுற்றுப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர் தலைர்களை உள்ளடக்கிய பேச்சுக்களே அர்த்தமுள்ளவையாக இருக்க முடியும் என்பதையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.

பல வருடங்கள் மீனவர்களுடன் நெருங்கிச் செயற்பட்டு வந்துள்ள தேசிய மீனவ ஒத்துழைப்ப அமைப்பை, அரசாங்கம் தனக்கு எதிரான சக்தியாகப் பாரக்காமல், அந்த அமைப்பின் அனுபவம், இந்தப் பிரச்சினையில் அதற்கு உள்ள அக்கறை என்பவற்றைப் பயன்படுத்தி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியிருக்கின்றது.

"உடன்பாடு ஏற்பட்டுள்ளது"

இதேவேளை இந்திய இலங்கை மீனவர்களிடையே மீன்பிடிப்பது தொடர்பில் கொள்கையளவில் ஒரு உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இலங்கை செல்லவுள்ள இந்தியக் குழுவுக்கு தலைமையேற்கும் ராமேஸ்வரம் மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான தேவதாஸ் கூறுகிறார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆண்டொன்றுக்கு இந்திய மீனவர்கள் இருநாட்டுக்கும் இடையேயான கடற்பரப்பில் 72 நாட்கள் மீன்பிடிப்பர் என்றும், எஞ்சிய நாட்களில் இலங்கை மீனவர்கள் அதேபோல செய்வார்கள் என்றும் இருதரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்றும் தேவதாஸ் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

எனினும் இருநாட்டு அரசாங்களும் இதற்கு ஒரு சட்டபூர்வமான அங்கீரத்தை கொடுத்தால் மட்டுமே இதை செவ்வன நிறைவேற்ற வழியேற்படும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்.

ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் ஒருவாரகாலம் இலங்கைக்கு செல்லவுள்ள இந்தியக் குழுவினர் அங்கு மீனவர்கள், அமைச்சர்கள் என பல்தரப்பினரை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விஜயம் குறித்து தேவதாஸ் அவர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே கேட்கலாம்