முதலமைச்சர் பதவிக்குரியவராக விக்னேஸ்வரன் தேர்வு

சம்பந்தருடன் விக்னேஸ்வரன்
Image caption சம்பந்தருடன் விக்னேஸ்வரன்

இலங்கையின் வடமாகாண சபைக்கான தேர்தலில் அமோக வெற்றியீட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் திங்களன்று யாழ்ப்பாணத்தில் கூடி, விக்னேஸ்வரன் அவர்களை உத்தியோகபூர்வமாக முதலமைச்சராகத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.

யாழ்ப்பாணத்தில் உள்ள டில்கோ விருந்தகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்களாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தேர்தலில் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் மற்றும் மாவை சேனாதிராஜா உட்பட ஏனைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஓப்பந்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்காக மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது.

இதனையடுத்து, 1988 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபைக்கான முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால் அந்த மாகாண சபை செயலிழந்து போனது. பின்னர் வடக்கும் கிழக்கும் இரண்டாகப் பிரிக்கப்பட்டன.

ஆயினும் அப்போது உறுதியளிக்கப்பட்ட மாகாண மட்டத்திலான அதிகாரங்களைக் கொண்ட வட மாகாண சபைக்கான தேர்தல் 25 வருடங்களுக்குப் பின்னர் முதற்தடவையாக இப்போதுதான் நடந்தேறியிருக்கின்றது.

இந்தத் தேர்தலில் 38 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றி வரலாற்று ரீதியான சாதனையைப் படைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.