வடமாகாணசபைத் தேர்தலில் இலங்கை ராணுவ அச்சுறுத்தல்: காமன்வெல்த் குழு

வடமாகாணத் தேர்தல் வாக்குப்பதிவு
Image caption வடமாகாணத் தேர்தல் வாக்குப்பதிவு

கடந்தவாரம் நடந்து முடிந்த இலங்கையின் வடமாகாணத் தேர்தலில் இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் பல்வேறு வகையிலும் காணப்பட்டதாக, காமன்வெல்த் நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடுமையாக சாடியிருக்கிறார்கள்.

இந்த தேர்தல்கள் நடந்த விதத்தை நேரடியாக கண்காணித்த காமன்வெல்த் நாடுகளின் கண்காணிப்புக்குழுவினர், இந்த தேர்தல் நடத்தப்பட்டவிதம், இதை இலங்கை அரசும், ராணுவமும் கையாண்ட விதம் இரண்டையும் விமர்சித்திருக்கிறார்கள்.

இந்த தேர்தல்கள் நடத்தப்பட்டவிதம் குறித்து காமன்வெல்த் நாடுகளின் கண்காணிப்புக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கை ராணுவத்தின் மேலதிக பிரசன்னமும், அவர்கள் செலுத்திய பல்வேறுவகையான அழுத்தங்களும், நியாயமான தேர்தல் நடைமுறைக்கு பெரும் தடையாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், இலங்கை ராணுவம் பல்வேறு வகையான மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், ஆளும் கட்சியானது, அரச நிர்வாக கட்டமைப்பை பல்வேறு வகையில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால் அதையெல்லாம் மீறி வாக்காளர்கள் காட்டிய உறுதிப்பாடு அவர்கள் பெருமளவில் வாக்களித்த விதத்தில் வெளிப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டவிதம் குறித்தும், இலங்கையின் தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகள் குறித்தும் காமன்வெல்த் நாடுகளின் கண்காணிப்புக்குழுவினர் பாராட்டை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த தேர்தலைப்பொறுத்தவரை, இலங்கை அரசும் இராணுவமும் விடுத்த பல்வேறுவிதமான அச்சுறுத்தல்களை புறந்தள்ளிவிட்டு பெரும்பான்மையான வாக்காளர்கள் பெருமளவில் தைரியமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்கள் என்பதே காமன்வெல்த் குழுவின் ஒட்டுமொத்த கருத்தாக இருக்கிறது.

இலங்கை ராணுவம் மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக காமன்வெல்த் நாடுகளின் சார்பிலான கண்காணிப்புக்குழுவே தெரிவித்திருப்பது, இலங்கை அரசு மற்றும் இராணுவத்தின் மீதான இதுபோன்ற கடந்தகால விமர்சனங்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, காமன்வெல்த் நாடுகளின் அடுத்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதில் உறுதியாக இருக்கும் காமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகத்திற்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

அனந்தி ஆதரவாளர்களை தாக்கியது ராணுவமே: சார்க் நாடுகள் குழு

Image caption தாக்கப்பட்ட அனந்தி ஆதரவளர்கள்

முன்னதாக, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையரும், இலங்கையின் மாகாணசபைத் தேர்தல்களை கண்காணித்த சார்க் நாடுகளின் கண்காணிப்பாளர்களின் குழுவின்தலைவருமான கோபாலசுவாமி, வடமாகாணத்தேர்தலில் போட்டியிட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் அனந்தி சசிதரனின் வீட்டின் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் தான் ஈடுபட்டனர் என்பதை தாம் “101” சதவீதம் உறுதியாக நம்புவதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் அனந்தியின் ஆதரவாளர்கள் 10 பேர் காயமடைந்தனர். அனந்தியின் வீடு தாக்கப்படுவது தொடர்பாக அறிந்த பவ்ரல் எனப்படும் உள்ளுர் தேர்தல் கண்காணிப்பு குழுவைச் செர்ந்த சட்டத்தரணி சுபாஸ் என்பவர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அவரும் தாக்கப்பட்டார்.

இலங்கை ராணுவத்தினர் வாக்காளர்களை சட்டவிரோதமாக வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்ததாகவும் கோபாலசுவாமி குற்றம் சாட்டினார்.

இலங்கை இராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுக்களை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி மறுத்திருக்கிறார். “அரசியலில் ஆர்வம் உள்ளவர்களே” இந்த சம்பவத்தில் இலங்கை இராணுவம் மீது குற்றம் சுமத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த தேர்தல் நடைமுறைக்கு இலங்கை இராணுவம் தடையாக செயற்பட்டிருந்தால், வடமாகாண தேர்தலில் 68 சதவீத வக்காளர்கள் வந்து வாக்களித்திருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்