இலங்கைப் போர்க்குற்ற விசாரணை : நவி பிள்ளை எச்சரிக்கை

  • 25 செப்டம்பர் 2013
Image caption இலங்கைப் போர்க்குற்ற விசாரணை : நவி பிள்ளை எச்சரிக்கை

போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார்.

ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவி பிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் வாயிலாக வாய்வழி அறிக்கையாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

போரின்போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், இராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சேனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்று நவி பிள்ளை கூறியுள்ளார்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவமும், கடற்படையும் நடத்தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகமான முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக விசாரணை நடத்தும் பொறிமுறையை ஏற்படத்த வேண்டிய கடமை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்

விடுதலைப் புலிகள் தொடர்புடைய போர் குற்றங்களை முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டோர் மீதான வழக்குகள் விரைவு படுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா ஆணையர் வலியுறுத்தியுள்ளார்.

' திருகோணமலை கொலை விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை'

Image caption திருகோணமலைக் கொலை விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என்கிறார் நவி பிள்ளை

திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் தன்னிடம் விளக்கமளித்தார் என்றும் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏசிஎப் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையையும் தாம் அவதானிப்பதாக நவி பிள்ளை தெரிவித்தார்.

இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் இராணுவமும் சென்றது என்று குறிப்பட்ட நவி பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார். இது இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது ஐநா மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப்படுவது மற்றும் அருகிப்போவது குறித்து தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக கூறிய நவி பிள்ளை, 17 ஆவது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப்பட வேண்டும் என்று படிப்பினைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

வட மாகாணத் தேர்தல் நடைபெற்றதை வரவேற்றுள்ள நவி பிள்ளை, 13 ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார் நவி பிள்ளை.

ராணுவப் பிரசன்னம் குறித்து கவலை

Image caption போர் முடிந்தும் ராணுவப் பிரசன்னம் முடியவில்லை ( ஆவணப்படம்)

போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பிறகும் அங்கு காணப்படும் கணிசமான இராணுவப் பிரசன்னம் குறித்து ஐ நா ஆணையர் கவலை வெளியிட்டார்.

பெண்கள், சிறுமிகள் மற்றும் பலவீனமான நிலையில் இருக்கும் பெண்களின் தலைமையிலான வீடுகளில் இருக்கும் பெண்கள் இராணுவத்தால் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்க் ஆளாகக் கூடிய சூழல் குறித்து கவலை வெளியிட்ட நவி பிள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்களை அரசு கிஞ்சிதமும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

தனியார் நிலங்களை இராணுவத் தேவைகளுக்காக கட்டாயமாக கையகப்படுத்துவது குறித்த ஆவணங்கள் நவி பிள்ளைக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும், கல்வி , விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளிலும் இராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவதாகவும் அவர் அவதானித்துள்ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விடயங்களில் இருந்து இராணுவத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள்ளுமாறு அரசிடம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளில் கூடுதலாக 53 பரிந்துரைகளை அமல்படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டியுள்ள மனித உரிமைகள் ஆணையர் அதே நேரம் அரசு இது தொடர்பில் ஒரு பொது விவாதத்தை நடத்தினால் அதனால் கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் நிலை

Image caption காணமால் போன தனது உறவை நினைத்து கதறும் ஒரு இலங்கைத் தாய் ( ஆவணப்படம்)

காணமல் போனோர் நிலையும் இன்று முக்கிய இடத்தை பிடித்தது.

கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந்தாலும், போருக்குப் பிறகு கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவு படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். காணமல் போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணையங்களால் பயனேதும் ஏற்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

காணமல் போனோர் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தத்தை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கைச்சாத்திடுவதன் மூலம் இது தொடர்பில் அரசுக்குள்ள உறுதிப்பாட்டை காட்ட முடியும் என்றும் காணமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த கடத்தி காணமல் போனோர் தொடர்பிலான ஐ நா நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.