தேர்தலுக்குப் பிறகு வடக்கில் வன்முறைகள் அதிகரிப்பு : ததேகூ

வடமாகாணத் தேர்தல்
Image caption வடமாகாணத் தேர்தல்

இலங்கையின் வடக்கே தேர்தல் முடிந்துவிட்ட போதிலும் பரவலாக தேர்தல் வன்முறைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது.

பல இடங்களிலும் பொதுமக்கள் தாக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் தொடர்கின்றது என்றும் யுத்தம் முடிந்தபின்னர் முதற் தடவையாகக் கைக்குண்டு தாக்குதல் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருப்பதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்த வன்முறைச் சம்பவங்களை தமிழ்தேசிய கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், அராலி பகுதியில் வீடுகளில் புகுந்த இலங்கை இராணுவத்தினர் பொதுமக்களைத் தாக்கியதாகவும், சுன்னாகம், மல்லாகம் போன்ற பகுதிகளில் வீதிகளில் சென்ற பொதுமக்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தினார்.

"நெடுந்தீவிலும் பொதுக்கள் தாக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கின்றார்கள். கொடிகாமம் கச்சாய் பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளுக்கு எரியூட்டப்பட்டிருக்கின்றது. மல்லாகம் பகுதியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவருடைய வீட்டிற்கு எதிரில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. யுத்தம் முடிந்ததன் பின்னர் வடக்கில் முதற்தடவையாக இப்படியான கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது நிலைமைகள் மிகவும் மோசமடைந்திருப்பதை காட்டுகிறது", என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன். காரணங்கள் எதுவுமில்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை வீதிக்கு இழுத்து வன்முறைகளைத் தூண்டுவதற்கான முயற்சியாகத்தான் இந்த சம்பவங்கள் இடம்பெறுகிறதோ என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் எழுப்பியுள்ளார். தேர்தல் வன்முறைகளில் இராணுவமே ஈடுபடுகின்றது என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை இராணுவ பேச்சாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இந்தச் சம்பவங்கள் அனைத்தும் காவல்துறையின் விசாரணையுடன் சம்பந்தப்பட்டவை என்பதால், அவைகள் குறித்து காவல்துறையிடமே கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். இது தொடர்பான காவல்துறையின் கருத்துக்களை அறிவதற்காக பிபிசி முயன்ற போதிலும், அவை உடனடியாக கிடைக்கப்பெறவில்லை.