மாகாணங்களுக்கு காணி அதிகாரம் இல்லை: இலங்கை உச்சநீதிமன்றம்

இலங்கை அரசின் காணியெடுப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் (ஆவணப்படம்)
படக்குறிப்பு,

இலங்கை அரசின் காணியெடுப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டம் (ஆவணப்படம்)

இலங்கையின் 13ஆவது அரசியல் சட்டத்திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபைகளுக்கு காணி அதிகாரங்கள் எவையும் இல்லை என்றும், மத்திய அரசாங்கத்துக்கே முழுமையான காணி அதிகாரம் இருப்பதாகவும் இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மோஹான் பீரிஸ் உட்பட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவினர் வியாழனன்று பரபரப்பான இந்தத் தீர்ப்பை அளித்திருக்கிறார்கள். மத்திய மாகாண சபையில் அமைந்துள்ள ஒரு காணி தொடர்பான வழக்கை விசாரித்த கண்டி மேல் நீதிமன்றம், இலங்கை அரசியல் சட்டத்தின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் மாகாணசபைகளுக்கு காணிகள் சம்பந்தமான எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை என்று 2000 ஆம் ஆண்டு தீர்ப்பளித்திருந்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றம், 13 ஆவது அரசியல் சட்டத்திருத்தத்தின்படி காணி தொடர்பான அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தீர்ப்பளித்திருந்தது.

கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யுமாறு கோரி இலங்கையின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மொஹான் பீரிஸ் அடங்கிய மூன்று நீதிபதிகள், பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தில் காணி அதிகாரங்கள் எவையும் மாகாணசபைகளுக்கு வழங்கப்படவில்லை என்று தீர்ப்பளித்திருப்பதாக இலங்கை அரசின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கோமின் தயாஸ்ரீ பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்தத் தீர்ப்பு, இலங்கை அரசுக்கு கிடைத்த பெரிய வெற்றி என்று வர்ணித்த அவர், காணி தொடர்பான அதிகாரம் மாகாணசபைகளுக்கு இருப்பதாக இதுவரை பொய்யான பிரச்சாரங்கள் செய்துவந்த இலங்கை அரசுக்கு எதிரான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு இந்தத் தீர்ப்பு முறையான பதிலை அளித்திருப்பதாக கூறினார். உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை "இந்த சக்திகள்" எளிதாக நிராகரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

படக்குறிப்பு,

சிங்களர்களும் நிலப்பறிப்புக்கு எதிராக போராடிவருகிறார்கள் (ஆவணப்படம்)

பதின்மூன்றாவது அரசியல் சட்டத்திருத்தத்தின்கீழ் மாகாணசபைகளுக்கு காணி அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக இலங்கை தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் வாதிட்டு வருகின்றன. மேலும் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் அளிக்கப்படுவது என்பது தமிழர்களின் இனப்பிரச்சனைக்கான குறைந்தபட்ச தீர்வாக அமையும் என்றும், அதிகாரப்பகிர்வு அரசியலுக்கான துவக்கப்புள்ளியாக அது அமையும் என்றும் தமிழர் தரப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

வடமாகாணசபையின் ததேகூ அரசு சந்திக்கும் முக்கிய சவால்

உலக அளவில் ஆர்வத்தை உருவாக்கிய வடமாகாணசபைத் தேர்தல்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்து, அதில் தமிழ்தேசிய கூட்டமைப்பு மிகப்பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கவிருக்கும் பின்னணியில், உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு இலங்கையின் அரசியல் அரங்கில் முக்கிய விவாதங்களைத் தோற்றுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம், தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதல்வர் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சி வி விக்னேஸ்வரன் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு பெற்றுத்தருவது தமது முக்கிய குறிக்கோள்களில் முதன்மையானவை என்று அறிவித்திருக்கும் பின்னணியில், இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அவருக்கு மிகப்பெரிய சவாலை தோற்றுவிக்கும் என்று கருதப்படுகிறது.

வடமாகாணசபையில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை, இலங்கை அரசாங்கம் இராணுவத்தின் தேவைகளுக்காக ஏற்கெனவே கையகப்படுத்தியிருக்கிறது. அதில் குடியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இப்படி விருப்பத்துக்கு மாறாக வெளியேற்றப்பட்டவர்கள் தங்களின் சொந்தக் காணிகளில், வாழ்விடங்களில் தங்களை மீண்டும் குடியேற அனுமதிக்கவேண்டும் என்று ஆண்டுக்கணக்கில் போராடி வருகிறார்கள்.

இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டிய அவசியத்தில் இருக்கும் வடமாகாணத்தில் அமையவிருக்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு உச்சநீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பு மிகப்பெரிய தடைக்கல்லாக அமையக்கூடும் என்று அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள்.