தமிழக மீனவர் படகுகளை பறிமுதல் செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் (ஆவணப்படம்)
Image caption இலங்கையில் கைதான இந்திய மீனவர்கள் (ஆவணப்படம்)

இலங்கையின் வடகடலில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள காரைக்கால், நாகபட்டினம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 34 இந்திய மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்யுமாறு பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 31 ஆம் தேதி வடபகுதி கடலில் கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும் அவர்களின் படகுகள் அவர்களிடம் கையளிக்கப்படவில்லை. படகுகள் தொடர்பாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த வழக்கு வியாழனன்று (செப்டம்பர் 26 ஆம் தேதி) பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, இலங்கைக் கடற்பகுதிக்குள் மீனவர்கள் 34 பேரும் அத்துமீறி பிரவேசித்திருந்தார்கள் என்று அவர்களே ஒப்புக்கொண்டதையடுத்து, எல்லைமீறி பிரவேசித்த குற்றத்திற்காக அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று இலங்கை அரச தரப்பு வழக்கறிஞர் விடுத்த கோரிக்கையை ஏற்று பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் சிறிநிதி நந்தசேகரன் அந்தப் படகுகளைப் பறிமுதல் செய்து, அவற்றைப் பராமரிப்பதற்காக கடற்படையினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் இந்திய மீனவர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக முன்னாள் நீதிபதி மு.திருநாவுக்கரசு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். விடுதலை செய்யப்பட்ட மீனவர்களின் படகுகளை விரிவான விசாரணையின்றி பறிமுதல் செய்வது இயற்கை நீதியாகாது என்று அவர் வாதிட்டபோதிலும், அவருடைய வாதம் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. சட்டத்திற்கமைவாகவே அந்தப் படகுகள் அரசுடைமையாக்கப்படுவதாக நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மன்னார் கடற்பரப்பில் கடந்த ஜுன் மாதம் 7 ஆம் தேதி 21 மீனவர்களும், ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி 20 மீனவர்களுமாக மொத்தம் 41 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் வியாழனன்று மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். அப்போது, அவர்கள் தாங்கள் குற்றம் செய்யவில்லை என தெரிவித்திருந்ததாக அவர்கள் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி கயஸ் பெல்டானோ தெரிவித்தார். அவர்களை விடுதலை செய்த மன்னார் நீதிமன்றம் அவர்களது ஐந்து படகுகளுக்கும் உரிமை கோரும் விசாரணையை டிசம்பர் மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தப் படகுகளை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்து அவற்றைப் பாதுகாக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடிக்கும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களினால் விளக்கமறியலில் வைக்கப்படுவதும், பின்னர் அவர்கள் படகுகளுடன் விடுதலை செய்வதுமே வழக்கமான நடவடிக்கைகளாக இடம் பெற்று வந்துள்ளது. ஆயினும் இப்போது இந்த நடைமுறையை மாற்றி, அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டால் படகுகளைப் பறிமுதல் செய்கின்ற நடவடிக்கைகள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.