மட்டக்களப்பு சிறைச்சாலை கைதி கூரைமேல் ஏறி உண்ணாவிரதம்

Image caption சிறுநீரக நோயாளியான தன்னை பொலநறுவை சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டாம் என்று கைதி கோரிக்கை

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதியொருவர் தன்னை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிறைச்சாலை கூரைமேல் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

முன்னாள் தமிழ் ஆயுதக் குழுவொன்றில் உறுப்பினராக இருந்ததாக கூறப்படும் இந்நபர் மட்டக்களப்பு புதுநகரை சேர்ந்த 28 வயதான அன்டன் ஜெயராஜ் என சிறைச்சாலை தகவல்கள் மூலம் தெரியவருகின்றது.

சட்ட விரோதமான முறையில் கைக்குண்டு வைத்திருந்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் பேரில் 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இந்நபர் தற்போது 4 வருடங்களுக்கு மேலாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தண்டனை பெற்று வருகின்றார்.

குறித்த நபர் சிறைச்சாலை அதிகாரிகளின் கடமைக்கு இடைய+று ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் இதன் காரணமாக இவரை பொலநறுவை சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்ய சிறைச்சாலை நிர்வாகம் நீதிமன்றத்தின் அனுமதியை ஏற்கனவே பெற்றிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சிறைச்சாலை அதிகாரிகள் பொலநறுவை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லத் தயாரானபோது குறித்த கைதி அவர்களை விட்டு விலகி ஓடிப் போய் சிறைச்சாலை கூரை மேல் அமர்ந்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யக் கூடாது என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் கீழே இறங்குமாறு கட்டளையிட்ட போதிலும் அதனை அவர் ஏற்க மறுத்து தொடர்ந்தும் கூரை மேல் அமர்ந்துள்ளார்.

சிறைச்சாலை கூரை மேல் அமர்ந்துஇ பத்திரிகையாளர்களை நோக்கி தான் சிறுநீரக நோயாளி என்றும் மட்டக்களப்பு மாஜிஸ்திரேட் வருகை தர வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.