மங்கள நீதிமன்றத்தில் ஆஜராக தயாராகிறார்; அவரை கைதுசெய்ய நடவடிக்கை

Image caption நீதிமன்றத்தில் ஆஜராக தயாராகிறார் மங்கள

இலங்கையில் மாத்தறை நகரில் கடந்த ஐந்தாம் திகதி ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் ஆதாரங்கள் இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவையும் பொலிசார் கைதுசெய்ய முடியும் என்று மாத்தறை நீதவான் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை மாத்தறை நீதிமன்றத்தில் தன்னை ஆஜர்படுத்தவுள்ளதாக மங்கள சமரவீர பிபிசியிடம் தெரிவித்தார்.

'சம்பவம் நடந்த நாள் முதல் ஒருவாரம் முழுவதும் நான் மாத்தறை பொலிஸ் நிலையத்துக்கு ஏறி இறங்கியிருக்கிறேன். எனது ஆட்கள் ஆரம்பத்தில் கைகளில் ஒரு சிறு குச்சியைக் கூட வைத்திருக்க வில்லை, வன்முறைகளில் ஈடுபடவில்லை என்பதற்கு வீடியோ ஆதாரங்கள் இருந்தபோதிலும் எனது முக்கிய ஆதரவாளர்கள் 24 பேரை நானாகவே பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தேன். என்னை வேண்டுமானால் விசாரியுங்கள், தேவையென்றால் கைதுசெய்யுங்கள் என்றெல்லாம் கூறியிருந்தேன். ஆனால் நான் பொலிசாருக்கு வழங்கிவந்த ஒத்துழைப்புக்காக அவர்கள் எனக்கு நன்றி கூட கூறியிருந்தார்கள். ஆனால் திடீரென்று அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தம் காரணமாக என்னைக் கைதுசெய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்' என்றார் மங்கள சமரவீர.

'மங்கள கைதுசெய்யப்படுவார்': பொலிஸ்

Image caption ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் முக்கிய சகாக்களில் ஒருவராக தற்போது மங்கள சமரவீர உள்ளார்

இதேவேளை மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினரை விரைவில் கைதுசெய்யவுள்ளதாக இலங்கை காவல்துறை கூறியுள்ளது. பொலிஸார் அளித்த தகவல்களின் அடிப்படையில் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டலின்படி கைது நடக்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண பிபிசியிடம் கூறினார்.

மங்கள சமரவீர உள்ளிட்ட குழுவினரைக் கைதுசெய்வதற்காக மாத்தறைக்கு சிறப்பு பொலிஸ் குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சி ஊடகத்துறைத் தலைவரான மங்கள சமரவீர, ஆளும் மகிந்த அரசாங்கத்தின் முன்னாள் வெளியுறவு அமைச்சராக இருந்தவர். பின்னர் அரசாங்கத் தரப்புடன் ஏற்பட்ட முரண்பாடுகளுக்குப் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் அவர் வெளியேற நேர்ந்தது.

தற்போது, மாத்தறை மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை இலக்கு வைத்தே அரசாங்கம் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாகவும் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டுகிறார்.

'மாத்தறையில் எனது ஆதரவாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வேட்டைக்கு எதிராக தொடர்ந்தும் போராடுவேன். இது இந்த அரசாங்கத்தின் ஒடுக்குமுறையையும் ராஜபக்ஷ ஆட்சியின் உண்மை முகத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறது' என்றார் மங்கள.

Image caption மங்கள மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராக பணியாற்றினார் (படம்: 2005)

மைத்திரி குணரத்ன, ஸ்ரீலால் லக்திலக்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சிலிருந்து வெளியேற்றப்பட்ட மாகாணசபை உறுப்பினர்கள் இருவரின் ஏற்பாட்டிலேயே கடந்த 5-ம் திகதி ரணில் விக்ரமசிங்கவை கட்சித் தலைமையிலிருந்து நீக்குமாறு கொழும்பு நோக்கி பேரணி நடத்தப்பட்டது.

அதே தினத்தில் ரணிலுக்கு ஆதரவான பேரணியை மாத்தறை நகரிலிருந்து தெவிநுவர விஷ்ணு கோவிலை நோக்கி மங்கள சமரவீர ஏற்பாடு செய்திருந்தபோதே இடைநடுவில் மோதல் வெடித்தது. துப்பாக்கிப் பிரயோகமும் நடந்தது.

25க்கும் மேற்பட்டவர்கள் கைதானார்கள். ரணில் எதிர்ப்பு பேரணியில் கலந்துகொண்ட மைத்திரி குணரத்னவின் தந்தை துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியக் குற்றச்சாட்டில் கைதானார்.