'ஜனாதிபதி ஆணைக்குழுவில் நம்பிக்கை இழந்துள்ள மக்கள்'

Image caption மக்கள் சந்தர்ப்பத்தை தவறவிடாமல் இருப்பதற்காக மேலும் கால அவகாசம் கேட்க மன்னார் பிரஜைகள் குழு நடவடிக்கை எடுத்துள்ளது

இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக கடந்த மாதம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு விபரங்களை வழங்கி உதவும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவினர் வடமாகாணத்தில் தகவல்களைத் திரட்டி வருகின்றனர்.

காணாமல்போனவர்கள் தொடர்பில் ஜனாதிபதி நியமித்துள்ள ஆணைக்குழு பற்றி பொதுமக்கள் கவனமில்லாமல் இருந்து விடக்கூடும், இந்தச் சந்தரப்பத்தைத் தவறவிட்டுவிடக் கூடும் என்பதற்காகவே தாங்கள் பொதுமக்களிடமிருந்து இந்தத் தகவல்களைத் திரட்டி ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் செயலாளர் தேவசகாயம் புலேந்திரன் சிந்தாத்துரை தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் முதல் தொகுதியாகத் திரட்டப்பட்டுள்ள தகவல்களை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதுடன் மேலும் கால அவகாசம் கேட்டுப் பெற்று, தற்போது இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டவர்களிடம் இருந்து தகவல்களைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப் போவதாகவும் சிந்தாத்துரை கூறினார்.

இதுவரையில் 1500க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டிருப்பதாகவும், மொத்தமாக 3000 பேர் பற்றிய தகவல்கள் கிடைக்கலாம் என்றும் சிந்தாத்துரை குறிப்பிட்டார்.

கண்துடைப்பு?

Image caption நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை படி, காணாமல்போனவர்கள் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச நாடுகள் வலியுறுத்திவருகின்றன

பல வருடங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ள தமது உறவுகளைத் தேடுபவர்கள் பல இடங்களுக்கும் அலைந்தும் எந்தவிதமான பயனும் கிடைக்காததனால், அவர்கள் இத்தகைய பதிவு நடவடிக்கைகளில் நம்பிக்கை இழந்திருப்பதனால் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்டவர்கள் தயக்கம் காட்டி வருவதாக மன்னார் பிரஜைகள் குழு சுட்டிக்காட்டுகின்றது.

கடந்த 2010 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, காணாமல் போயுள்ளவர்கள் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காகத் தனியான விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்று சிபாரிசு செய்திருந்தது.

அதற்கமைவாகவே ஜனாதிபதி இந்த புதிய ஆணைக்குழுவை நியமித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் காணாமல் போயுள்ளவர்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான, நம்பகமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐநாவும் சர்வதேச நாடுகளும் இலங்கையைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையிலேயே அரசாங்கம் இந்தப் புதிய ஆணைக்குழுவை நியமித்துள்ளது.

இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகவே தெரிகின்றது என்றும் அவதானிகள் கூறுகின்றனர்.