ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'வடக்கில் தமிழர்கள் மட்டும் வாழவில்லை': இலங்கை காவல்துறை

Image caption இலங்கை காவல்துறை

இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தப்படி மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்கள் உள்ளன. ஆனால் அவற்றை மாகாணசபைகளுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இன்னும் முன்வரவில்லை.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள சி.வி. விக்னேஸ்வரன், வடக்கு பிராந்திய மக்களின் மொழியையும் கலை, கலாசார, வாழ்க்கை முறையையும் புரியாத காவல்துறையினர் தொடர்ந்தும் அங்கு இருப்பது, அங்கு ஜனநாயகம் ஏற்பட தடையாக இருப்பதாக நேற்று வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.

உள்ளூரில் உள்ள இளைஞர்களுக்கு பயிற்சியளித்து காவல்துறையில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர்களை காவல்துறையில் சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதுகுறித்து பிபிசி தமிழோசையிடம் பதிலளித்த இலங்கை காவல்துறையின் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண, முதலமைச்சர் கூறுவதற்கு முன்னரே காவல்துறை தமிழ் தெரிந்தவர் அதிகாரிகளை வடக்கில் போதுமான அளவுக்கு நியமித்துள்ளதாகக் கூறினார்.

'வடக்கு பிராந்தியத்தில் எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் தமிழ் மக்கள் முறைப்பாடு செய்ய, தமிழில் குறிப்புகளைப் பெற தமிழில் நீதிமன்ற அறிக்கைகளைப் பெறக்கூடியதாகத்தான் இருக்கிறது' என்று அஜித் ரோஹண கூறினார்.

'அச்சுறுத்தல் எப்போதும் ஏற்படலாம்'

Image caption 1970களின் முற்பகுதியில் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது போன்ற பாதுகாப்பு அச்சுறுத்தல் எப்போதும் ஏற்படலாம் என்று இலங்கை காவல்துறை கூறுகிறது (படம்-யாழ் நகரில் இராணுவம் ரோந்து - செப்டெம்பர் 2013)

அதேபோல, 'காவல்துறையினருக்கு கொடுக்கப்படுகின்ற பயிற்சிநெறியின்போது பல்லின சமூகங்களின் கலசாரங்கள் பற்றியும் அவற்றுக்கு மதிப்பளிக்கும் முறை பற்றியும் அறிவூட்டலும் வழங்கப்படுகிறது. முதலமைச்சர் இப்போது சொல்லியுள்ளதை நாங்கள் யுத்தம் முடிய முன்னரே செய்துவிட்டோம். புதிதாக செய்வதற்கு ஒன்றுமில்லை' என்றும் இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

'வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் மட்டும்தான் வாழ்கிறார்கள் என்று கூறமுடியாது. வவுனியா மாவட்டத்தில் சிங்கள மக்கள் இருக்கிறார்கள். மன்னாரில் முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். அதேபோல எதிர்காலத்தில் இன்னும் குடியேறவும் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். அனுராதபுர எல்லையில் சிங்கள மக்கள் கூடுதலாக வாழ்கிறார்கள். வடக்கிலிருந்து உருவான தமிழர்களையே பொலிஸில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை' என்றும் இலங்கை காவல்துறை சார்பில் பேசவல்ல அதிகாரியான அஜித் ரோஹண கூறினார்.

இதேவேளை, 'பிரபாகரன் இந்த யுத்தத்தை 1970களில் தொடங்கும் போதும் நிலைமை இப்படித் தான் இருந்தது. இப்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் எப்போது ஏற்படும் என்று சொல்லமுடியாது' என்றும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.