'திருகோணமலை தென்னமரவாடி மக்களின் காணிகளும் பறிபோகின்றன'

Image caption கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி

இலங்கையில் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில், வடக்கு-கிழக்கு மாகாணங்களின் எல்லையில் அமைந்துள்ள தென்னமரவாடி கிராமத்தின் மக்கள் தமது பாரம்பரிய காணிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக முறையிடுகின்றனர்.

நாட்டின் யுத்தம் காரணமாக, தென்னமரவாடி கிராமத்து மக்கள் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஒட்டுமொத்தமாக வௌியேறினர்.

தற்போது படிப்படியாக மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டுவரும் சூழ்நிலையில், அக்கிராமத்தின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் தண்டாயுதபாணி கூறினார்.

கிழக்கு மாகாணசபையின் மாதாந்த அமர்வில் அவசர பிரேரணை ஒன்றையும் அவர் சமர்ப்பித்துள்ளார்.

காணி அதிகாரம்

காணி அதிகாரம் மத்திய அரசுக்கு உரியது என்று அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் காட்டியே, மக்களின் பாரம்பரியமான காணிகள் பறிக்கப்பட்டுவருவதாக தண்டாயுதபாணி கூறினார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின்படி, காணிகளை பயன்படுத்தும் அதிகாரத்தை மாகாணசபைகள் முழுமையாக அனுபவிக்க இடமளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதுபற்றி கிழக்கு மாகாணசபையின் காணி அமைச்சர், மகாவலி அதிகாரசபையுடனும் மத்திய அரச அதிகாரிகளுடனும் பேச்சுநடத்துவார் என்று உறுதியளித்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.