முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை வடக்கில் மீளக் குடியமர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

இலங்கையின் வடபகுதியில் இருந்து விடுதலைப்புலிகளினால், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களை அங்கு மீளக் குடியமர்த்துமாறு அரசாங்கத்தைக் கோரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.

இன்று மாலை கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் ஒன்று கூடிய அரசாங்க ஆதரவுக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி உட்பட மற்றும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

வடக்கில் இருந்து சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் விடுதலைப்புலிகளினால் வெளியேற்றப்பட்டு இன்று 23 ஆண்டுகள் பூர்த்தியாவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரான முஹமட் முஸாம்பிர் கூறியுள்ளார்.

ஆகவே தொடர்ந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இந்த மக்களை மீள்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.