போர்க்குற்றங்கள் : "மறைக்க ஏதும் இல்லை"--மஹிந்த

Image caption போர்க்குற்றங்கள்-- இலங்கை நீதித்துறையால் விசாரிக்கமுடியும் என்கிறார் மஹிந்த

இலங்கை அரசுக்கெதிராக எழுப்பப்படும் போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் பற்றி இலங்கை மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

விடுதலைப்புலிகளுடனான 30 ஆண்டு காலப் போரில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறிய அவர், ஆனால் தனது அரசு தமிழ்ப்புலிக் கிளர்ச்சியாளர்களைத் தோற்கடித்ததன் மூலம் இந்தக் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக கூறினார்.

போர்க்குற்றங்கள் குறித்த எந்த ஒரு புகார்களும் தனது நாட்டின் நீதி அமைப்பின் மூலம் விசாரிக்கப்பட முடியும் என்றும் அவர் கூறினார்.

காமன்வெல்த் உச்சிமாநாடு இலங்கையில் நாளை வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில் அவரது இந்தக் கருத்துக்கள் வருகின்றன.

இந்த உச்சிமாநாட்டை, இலங்கையின் மனித உரிமைச் செயல்பாடுகள் குறித்த சர்ச்சையில், இந்திய,கனடிய மற்றும் மொரிஷியஸ் பிரதமர்கள் புறக்கணிக்கின்றனர்.

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரன் இன்று பின்னதாக கொழும்பு வந்தடைகிறார். இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்த ஒரு விசாரணையை அவர் கோருவார்.