சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையை மஹிந்த நிராகரித்தார்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
Image caption இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

போர்க்குற்றங்கள் குறித்து இலங்கை தானே ஒரு சுயாதீன விசாரணையை நடத்தும் என்பது குறித்து அனைவரும் நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது ஆட்சியின் மீது சர்வதேச சமூகத்தினால் கொடுக்கப்படும் அழுத்தம் குறித்து எச்சரிக்கையும் செய்துள்ளார்.

''கண்ணாடி மாளிகைக்குள் இருந்துகொண்டு எவரும் கல் எறியக் கூடாது'' என்று அவர் கூறினார்.

போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க தான் ஏற்கனவே ஒரு ஆணைக்குழுவை அமைத்துவிட்டதாகவும், அது சுயாதீனமானது என்றும் அவர் கூறினார்.

ஏற்கனவே காணாமல் போனவர்கள் குறித்து ஒரு விசாரணைக்குழுவை தான் அமைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

''30 வருட போரில் நடந்தவற்றை விசாரிப்பதற்கு எங்களுக்கு நிறையக் காலம் பிடிக்கும். குற்றஞ்சாட்டப்படும் எவருக்கு எதிராகவும் நாம் விசாரிப்போம். முன்பும் அதனைக் கூறியிருக்கிறோம். எங்களிடம் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இல்லாவிட்டால், எங்களை விமர்சிப்பவர்களுக்கு நாங்கள் இங்கு வர விசா கொடுத்திருப்போமா?, நாடெங்கும் அவர்கள் சென்று எதிர்க்கட்சிக் குழுக்களை சந்திக்க அனுமதித்திருப்போமா?'' என்றார் மஹிந்த ராஜபக்ஷ.

இலங்கைப் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை கோரும் பிரிட்டனின் கோரிக்கையையும் அவர் நிராகரித்தார்.