'மாகாணக் காணிகளை வனப்பிரதேசமாக்குவதன் மூலம் மத்திய அரசின் கீழ் கொண்டுவர முயற்சி'

இரா. துரைரட்ணம்
Image caption இரா. துரைரட்ணம்

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வளமான அரச காணிகள் வனப்பிரதேசமாக வர்த்தகமானியில் மத்திய அரசினால் தன்னிச்சையாக பிரகடனப்படுத்தப்படுத்தப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டுகின்றது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையானது மாகாண சபைக்குரிய காணிகளை பறித்தெடுக்கும் செயல் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் குற்றஞ்சாட்டுகிறார். குறிப்பாக, மத்திய அரசின் வனத்துறை அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்தவினால் வெளியிடப்பட்டுள்ள விஷேட வர்த்தமானி அறிவித்தலொன்றில், மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கிரான், வவுணதீவு, ஆகிய பிரதேசங்களில் சுமார் ஒரு இலட்சத்து பத்தாயிரம் ஏக்கர் அரச காணிகள் வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படவிருப்பதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார். குறித்த காணி அடையாளமிடப்படுவது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களோ அல்லது ஆலோசனைகளோ பெறப்படவில்லை என தெரிவிக்கும் அவர், இது தொடர்பாக அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதமொன்றில் அவற்றை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். வனப்பிரதேசம் என அடையாளம் காணப்பட்டுள்ள காணிகளில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலம், வயல் நிலங்கள், சிறு தானியச் செய்கை நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்களும் அடங்குவதாக, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாக மாகாண சபையினால் இதுவரை காலமும் நிர்வகிக்கப்பட்டுவந்தத குறித்த காணிகள் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறுகிறார். எனவே யுத்த காலத்திற்கு முன்பு தொடக்கம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் மிகுதி காணிகளே வனப்பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.