வீட்டுத்திட்டம் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம்
Image caption வீட்டுத்திட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட வேண்டும் எனக் கோரி, மீள்குடியமர்ந்துள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி அரசாங்க அதிபரிடம் மகஜர் கையளித்திருக்கின்றார்கள்.

கந்தன்குளம், புலவனாவூர், கோவில் மோட்டை, குஞ்சுக்குளம் பேன்ற கிராமங்களைச் சேர்ந்த 200 குடும்பங்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்த வீட்டுத் திட்டத்தை, வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரிகள் மாற்றியிருப்பதனால், தங்களுக்கு வீட்டுத் திட்டம் இல்லாமல் போயிருக்கின்றது என்று அவர்கள் முறையிட்டிருக்கின்றார்கள்.

ஆறுமாத காலத்திற்கென அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வீடுகள் அழிந்து போயிருப்பதனால், அவற்றில் மழை காலத்தில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், தற்போது மழைக்காலம் தொடங்கியிருப்பதையடுத்து தங்களுக்கு வீட்டுத் திட்டம் உடனடியாக வழங்கப்பட வேண்டும் எனக் கோரியிருக்கின்றனர்.

கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தி பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், வவுனியா அரசாங்க அதிபரிடம் தங்களது கஸ்ட நிலைமைகளை எடுத்துக் கூறி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.

அதற்குப் பதிலளித்த வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர, தன்னிடம் கையளிக்கப்பட்டுள்ள மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பதுடன் வடமாகாண முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார். அத்துடன், உறுதியளிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்திற்கு நடந்தது என்ன என்பது பற்றியும் விசாரணை செய்வதாகவும் உறுதியளித்துள்ளார்.