பிரிட்டிஷ் பிரஜை கொலை வழக்கு: சந்தேக நபர்களுக்கு பிணை

Image caption குராம் ஷேய்க் கொலைசெய்யப்பட்டபோது, அவரது பெண் நண்பியும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடுகள் இருந்தன

பிரிட்டிஷ் பிரஜை குராம் ஷேக் கொலை தொடர்பில் கைதான தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் விதான பத்திரன உள்ளிட்ட 6 பேரை கொழும்பு மேல்நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.

ஆறு பேர் மீதும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர்கள் 6 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போதே நீதிபதி அவர்களை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்ததாக சந்தேக நபர்கள் சார்பில் வாதிட்ட சட்டத்தரணி ஷாப்திக வெல்லப்புலி பிபிசியிடம் தெரிவித்தார்.

குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேரையும் பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபணை இல்லையென அரசதரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, ஒவ்வொரு நபரையும் தலா 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

அதேபோல், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடைசெய்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாட்சியாளர்களை அவர்கள் அச்சுறுத்தக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாட்சியாளர்கள் அச்சுறுத்தப்படுவதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் பட்சத்தில் பிணையை ரத்துசெய்துவிட்டு, விளக்கமறியலில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி 6 பேருக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

அதன்பின்னர், வழக்கு விசாரணை எதிர்வரும் டிசம்பர் 2-ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

2011-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் திகதி தங்காலை பிரதேசத்தில் உள்ள உல்லாசவிடுதி ஒன்றில் வைத்து குர்ராம் ஷேய்க் என்ற பிரிட்டிஷ் பிரஜை கொலைசெய்யப்பட்டமை தொடர்பில்17 குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குராம் ஷேக் படுகொலை தொடர்பில் முறையான விசாரணைகள் நடந்து நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.