நாணயங்களை புழக்கத்துக்கு விடக் கோரிக்கை

இலங்கை நாணயங்கள்
Image caption இலங்கை நாணயங்கள்

இலங்கையில் பொது மக்களிடமுள்ள சில்லறை நாணயங்களை புழக்கத்திற்கு விடுமாறு அந்நாட்டு மத்திய வங்கியினால் பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் உள் நாட்டு பத்திரிகைகளில் அண்மைக்காலமாக வெளியிடப்பட்டும் வருகின்றது.

இலங்கையில் ஐம்பது சதம் , ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் மற்றும் பத்து ரூபாய் என சில்லறை நாணயங்கள் மத்திய வங்கியினால் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள போதிலும் அந்த நாணயங்களுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதையடுத்தே மத்திய வங்கியினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் இதுவரை புழக்கத்திற்கு விடப்பட்டுள்ள சில்லறை நாணயங்களின் எண்ணிக்கை விபரங்கள் குறிப்பிடப்பட்டு சில்லறை நாணயங்களை இழுப்பறைகளிலும் அலுமாரிகளிலும் உண்டியல்களிலும் வைத்திருக்க வேண்டாம் என அந்த அறிவித்தலில் கேட்கப்பட்டுள்ளது.

சில்லறை நாணயங்கள் ஆபரணங்கள் தயாரிப்பு உட்பட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டாலும் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அந்தளவு எண்ணிக்கையிலான நாணயங்களும் அப்படி பயன்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பதுதான் பலரது கருத்தாகும்.

சில்லறை நாணயங்களுக்கு நிலவும் தட்டுப்பாடு தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய பொது மக்கள், பொருட்கள் கொள்வனவு மற்றும் போக்குவரத்து உட்பட தமது அத்தியாவசிய தேவைகளின் போது தாங்கள் பாதிப்புகளையும் சிரமங்களையும் எதிர்நோக்குவதாக குறிப்பிடுகின்றனர்.

மதவழிபாட்டு தலங்களிலுள்ள உண்டியல்களிலே கணிசமான அளவு இந்தச் சில்லறை நாணயங்கள் இருப்பதால் மத வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகள் அவ்வப்போது உண்டியல்களிலுள்ள தொகைகளைக் கணக்கிட்டு வங்கிகளில் வைப்பிலிடுதல் அல்லது உள்ளுர் வர்த்தகர்களிடம் ஒப்படைத்து நாணயத் தாள்களாக மாற்றிக்கொள்வதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒரளவாவது தீர்வை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.