போர்க்கால இழப்புகள் குறித்த கணக்கெடுப்புகள் தொடக்கம்

Image caption போர்க்காலத்தில் காணாமல் போனோர் குறித்து கவலைகள்.

இலங்கையில் சுமார் மூன்று தசாப்தங்கள் நீடித்த போர்க்காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஆகியவை குறித்த ஒரு கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிவரங்கள் ஆகிய இரண்டு துறைகளும் இணைந்து நாடு தழுவிய அளவில் இந்த கணக்கெடுப்பை நாளை-வியாழன் முதல் தொடங்குகின்றன.

போருக்கு பின்னரான காலத்தில் அரசால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் அளித்த பரிந்துரைகளில் இது ஒரு முக்கியமான விஷயமாக இருந்தது.

Image caption உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களின் ஒரு சாட்சி

அந்தப் பரிந்துரையில் காணாமல் போனவர்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து ஆராய ஒரு சிறப்பு செயலணிக் குழு அமைக்கப்படும் என்றும், தேசிய செயல்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

அந்த தேசிய செயல் திட்டத்தில், தொழில்முறை ரீதியில், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களையும் உள்ளடக்கும் வகையில், நாடு முழுவதும் ஒரு கணக்கெடுப்பு நடத்தி, மோதல்கள் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் மற்றும் சொத்துக்கள் சேதம் ஆகியவை குறித்து நேரடியாக தகவல்களை சேகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Image caption கட்டாயக் கடத்தல்கள் குறித்தும் குழு ஆராயவுள்ளது.

இந்த கணக்கெடுப்பின் மூலம் கிடைக்கும் தகவல்கள் மற்றும் புள்ளிவிவரங்கள், காணாமல் போனோர் தொடர்பாக அரசால் அமைக்கப்பட்டுள சிறப்பு செயலணிக் குழுவினரால் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அரசுக்கு பரிந்துரைகள் அளிக்கப்படும் எனவும், தமது குழுவுக்கு அளிக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும் அந்த சிறப்பு செயலணிக் குழுவிலுள்ள மனோ ராமநாதன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

நாளை முதல் நாடு முழுவதும் தொடங்கவுள்ள இந்தக் கணக்கெடுப்பு 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் மோதல்கள் காரணமாக இடம்பெற்ற உயிரிழப்புகள், சொத்துக்களுக்கான சேதங்கள் ஆகியவை குறித்த விபரங்களை சேகரிக்கவுள்ளதாக அரசின் அறிக்கை கூறுகிறது.

Image caption போரின் காரணமாக சுமார் 90,000 பேர் விதவைகளாக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கணக்கெடுப்பு கிராம சேவகர்கள் பிரிவு மட்டத்தில் நடைபெறும் என்றும், அந்தப் பணியை கிராம சேவகர்களே நடத்துவார்கள் எனவும் அரசு கூறியுள்ளது.

அவ்வகையில் இலங்கை முழுவதும் 14,022 கிராம சேவகர்கள் பிரிவில் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.