"விசா விதி" பற்றி தான் அறிந்திருக்கவில்லை என்கிறார் கவிஞர் ஜெயபாலன்

Image caption நார்வேக்கு திரும்பி அனுப்பப்பட்ட வ.ஐ.ச ஜெயபாலன்: "விசா விதிகள் பற்றி உணர்ந்திருக்கவில்லை"

இலங்கையில் விசா விதிகளை மீறி பொது நிகழ்ச்சிகளில் பேசியதாக தடுத்து வைக்கப்பட்ட தமிழ்க் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், நேற்றிரவு ( செவ்வாய்க்கிழமை ) இலங்கையிலிருந்து நார்வேக்கு வெளியேற்றப்பட்டார்.

நார்வே திரும்பிய பின் பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட ஜெயபாலன், தான் யாழ்ப்பாணத்திலிருந்து தனது சொந்த ஊரான வடகாடுக்கு சென்று தனது தாயாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சென்று கொண்டிருக்கையில், பயங்கரவாதத் தடுப்புப் போலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஆனால் தாயாரின் நினைவிடத்துக்கு செல்லாமல் திரும்பமாட்டேன் என்று தான் கூறி சாலையில் அமர்ந்து போராடிய பின்னர், தன்னை தாயின் நினைவிடத்துக்குச் செல்ல அவர்கள் அனுமதித்தனர் என்று அவர் கூறினார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆனால் விசா விதிகளை மீறியதான குற்றச்சாட்டு குறித்து பதிலளித்த அவர், இந்தியா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் தான் சுற்றுலா விசாவில் செல்லும்போது இது போன்று உரை நிகழ்த்தியிருப்பதாகவும், அங்கெல்லாம் இதற்கான "ஜனநாயக வெளி" இருக்கிறது என்றும் கூறினார்.

ஆனால் இலங்கையில் இது அனுமதிக்கப்படுவதில்லை என்பதைத் தான் உணர்ந்திருக்கவில்லை என்றார்.

மேலும் இலங்கையில் தன்னை ஒரு வெளிநாட்டவராகவும் தான் கருதவில்லை என்றார் அவர்.

இலங்கையில் இரு கூட்டங்களில் பேசியதை ஒப்புக்கொண்ட அவர், இந்தக் கூட்டங்களில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் ஒற்றுமை பற்றிப் பேசியதாகவும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு மாநிலம் என்று தான் சொன்ன கருத்தை தனி நாடு என்று பாதுகாப்பு பிரிவினர் புரிந்து கொண்டதாகவும் கூறினார்.

ஆனால் தன்னைப்பற்றி இலங்கை அமைச்சர்கள் பஷீர் ஷேகு தாவுத் மற்றும் ரவுப் ஹக்கீம் ஆகியோர் சாதகமான கருத்துக்களை தந்திருக்கின்றனர் என்றார் அவர்.

தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மன உளைச்சல் இருந்தது ஆனால் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்படவில்லை என்றார் அவர்.