பௌத்த பிக்கு "அச்சுறுத்தலை" எதிர்த்து அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம் செய்யும் அரசு ஊழியர்கள்
Image caption ஆர்பாட்டம் செய்யும் அரசு ஊழியர்கள்

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்குவொருவரால் கடமையிலிருந்த பெண் அதிகாரியொருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து வியாழனன்று நண்பகல் ஊழியர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நேற்று புதன்கிழமை பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு அலுவலக நேரத்தில் வருகை தந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் பிரதம பௌத்த பிக்குவான அம்பிட்டியே சுமனரத்னதேரா தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததோடு அலுவலக உடமைகளையும் சேதப்படுத்தியதாக அவருக்கு எதிராக பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெத்தினம் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சம்பவத்தை கண்டித்தும், சம்மந்தப்பட்ட பௌத்த பிக்கு கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் பட்டிப்பளை பிரதேச செயலக ஊழியர்கள் நேற்று முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் அலுவலகத்தின் வழமைநிலை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பிரதேச செயலக ஊழியர்கள் இன்று வியாழன் நண்பகல் பிரதேச செயலகம் முன்பாகக் கூடி ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டனர். பிரதேச செயலாளரினால் தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் அலுவலக உடமைகள் சேதமாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்களை அம்பிட்டியே சுமனரத்னதேரோ மறுத்துள்ளார். ஆனால் பிரதேச செயலாளருடன் தான் வாக்குவாதத்தில் மட்டுமே ஈடுபட்டதாக அவர் குறிப்பிடுகின்றார். சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட சிலரிடமும் பௌத்த பிக்குவிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதோடு சேதமாக்கப்பட்டதாக கூறப்படும் அலுவலக உடமைகளில் காணப்படும் கைரேகை அடையாளங்களையும் பதிவு செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக இன்று வியாழக்கிழமை களுவாஞ்சிக்குடி நீதிமன்றத்தில காவல்துறையினரால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையின் பேரில் பிரதேச செயலாளர் மற்றும் பௌத்த பிக்கு இருவரும் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருந்தனர். பௌத்த பிக்குவை பினையில் செல்ல அனுமதித்த நீதிமன்றம் எதிர்வரும் டிசம்பர் 19ம் தேதிவரை விசாரணைகளை ஒத்திவைத்துள்ளது.