காணாமல்போனோர் குறித்து கிழக்கில் முறைப்பாடுகள் பதிவு

முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன
Image caption முறைப்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர்க்காலத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவுக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து மூவினத்தை சேர்ந்தவர்களும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்கள்.

1990 ஜூன் 10ம் திகதி தொடக்கம் 2009 மே 19ம் திகதி வரையிலான காலப்பகுதியில் காணமல் போனவர்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளைப் பதிவு செவதற்கு வழங்கப்பட்டடிருந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.

முன்னாள் விடுதலைப்புலிகள், பாதுகாப்பு படை வீரர்கள், காவல்துறை மற்றும் பொது மக்கள் என பலரும் காணாமல் போனமை குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு கூறுகின்றது.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரை அம்மாகாணத்திலிருந்தும் அநேகமான முறைபாடுகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தனியாகவும் அமைப்புகள் ஊடாகவும் மக்கள் பிரதிநிதிகள் ஊடாகவும் இந்த முறைப்பாடுகள் பெறப்பட்டு ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம்கள் காணாமல்போயுள்ள சம்பவம் தொடர்பாக தன்னிடம் பதிவு செய்யப்பட்டுள்ள 106 பேர் தொடர்பான முறைப்பாடுகள் தன்னால் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுக் குறிப்பிடுகின்றார்.

மட்டக்களப்புப மாவட்டத்தில் தமிழர்கள் காணாமல்போயுள்ளமை தொடர்பாக, உள்ளுர் தன்னார்வத் தொண்டர் அமைப்பான தாயக மறுமலர்ச்சி கழகம் நேரடியாக பல்வேறு பிரதேசங்களுக்கு சென்று விபரங்களை பெற்று ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளது.