ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை முஸ்லிம்களுக்கு தொடரும் அச்சுறுத்தல்கள்

Image caption கொழும்பிலுள்ள சில முஸ்லிம் மக்கள்-ஒரு தொழுகையின் போது( பழைய படம்)

இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையிலுள்ள மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகள் நடத்த வேண்டாம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

இன்று-செவ்வாய் காலை தொழுகை நேரத்துக்கு சற்று முன்னர் காவல்துறையினர் அந்த குறிப்பிட்ட பள்ளிவாசல்களில் தொழுகையை நடத்த வேண்டாம் என்று சொல்லியதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

அவ்வாறு அவர்கள் தொழுகையை முன்னெடுத்தால் அது பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்கிற அச்சத்தாலேயே அப்படி கூறியதாக காவல்துறையினர் தம்மிடம் தெரிவித்தனர் எனவும் அவர் கூறுகிறார்.

இதையடுத்து அந்த மூன்று பள்ளிவாசல்களின் நிர்வாகிகளையும் தான் சந்தித்ததாகவும், பின்னர் அந்தப் பகுதிக்கு பொறுப்பான காவல்துறை உயரதிகாரியுடனும் தான் பேசியதாகவும் இது முஸ்லீம் சமூகத்திடையே மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது என்று சுட்டிக்காட்டியதாகவும் அமைச்சர் பதியுதீன் கூறுகிறார்.

"சட்டவிரோதமானவை"

Image caption இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பல போராட்டங்கள் நடைபெறுகின்றன(பழைய படம்)

அந்தப் பள்ளிவாசல்கள் அமைந்திருக்கும் பகுதியிலுள்ள சில பௌத்தமத குருமார்களும், அச்சமூகத்தைச் சேர்ந்தவர்களும் காவல்துறையினரிடம் அந்தப் பள்ளிவாசல்கள் சட்டவிரோதமானவை என்று கூறியதாகவும் அதையடுத்தே தாங்கள் தலையிட்டதாகவும் காவல்துறையினர் தன்னிடம் கூறியதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் அவை சட்டவிரோதமானவை என்றால், அதை சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டுமே தவர, வேறு வழிகளில் நடவடிக்கை எடுப்பது தவறு என தான் சுட்டிக்காட்டியதை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டனர் எனவும் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.

நாளை புதன்கிழமை-இது தொடர்பிலான ஒரு கூட்டத்தை காவல்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர் எனவும், அதில் பிரச்சினை குறித்து விவாதிக்கப்படும் எனவும் கூறும் அமைச்சர், தேவைப்பட்டால் ஜனாதிபது மற்றும் பாதுகாப்புச் செயலருடனும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றும் மேலும் தெரிவித்தார்.