'புல்மோட்டை முஸ்லிம்களின் 500 ஏக்கர் காணி கடற்படைக்கு'

Image caption பாதிக்கப்படும் மக்கள் அரச அதிகாரிகளிடம் தங்களின் முறைப்பாடுகளைச் செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டம், புல்மோட்டை பிரதேசத்திலுள்ள பட்டிக்குடாவில் முஸ்லிம்களின் பயிர்ச்செய்கை காணிகள் கடற்படை முகாம் விஸ்தரிப்புக்காக தொடர்ந்தும் கையகப்படுத்தப்படுவதாக கிழக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் மொகமட் ரம்ழான் அன்வர் தெரிவிக்கின்றார்.

போர்க் காலத்தில் அப்பிரதேசங்களிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள், தற்போது அங்கு தற்காலிக கொட்டில்கள் அமைத்து பயிர்ச்செய்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

இப்போது, குறித்த காணியில் தானியச் செய்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை அவர்களின் எல்லை வேலிகளையும் கொட்டில்களையும் அகற்றிவிட்டு, இம்மாதம் 25ம் திகதிக்கு முன்னதாக வெளியேறுமாறு திருகோணமலை மாவட்ட உதவி காணி ஆணையாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

'கடற்படையின் தேவைக்கு' என அடையாளமிடப்பட்டிருந்த காணியில் தற்போது 'கடற்படைக்குச் சொந்தமான காணி' என்ற அறிவிப்பு பலகைகள் தமிழிலும் சிங்களத்திலும் காணப்படுகின்றன.

Image caption கடற்படைக்குச் சொந்தமான காணி என தமிழிலும் சிங்களத்திலும் அறிவிப்பு பலகைகள் போடப்பட்டுள்ளன

இன்று வெள்ளிக்கிழமை வனஜீவராசிகள்- வனத்துறை ,காணி உட்பட பல்வேறு துறைசார் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று அங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிட சென்றிருந்த போது, பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகினறது.

கடற்படை முகாம் விஸ்தரிப்புக்காக 193 ஏக்கர் காணி தேவை என பிரதேச செயலாளர் ஊடாக கிழக்கு மாகாண காணி பகிர்தளிப்பு குழுவிற்கு மனுச் செய்யப்பட்டுள்ள போதிலும் அதற்கான அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும் மாகாண சபை உறுப்பினர் மொகமட் ரம்ழான் அன்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், குறித்த காணிக்கான அனுமதி இதுவரை கிடைக்காத நிலையில் 500 ஏக்கருக்கு மேல் காணிகளை கடற்படையினர் தமது தேவைக்கு பெற முற்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காணி அனுமதி பத்திரத்திற்காக காணி தினைக்களத்தில் ஏற்கனவே மனுச் செய்துள்ளதை இன்று வருகை தந்த அதிகாரிகளிடம் தான் சுட்டிக்காட்டியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.