இலங்கை காவல்துறை மீது மனித உரிமைகள் குழுவிடம் புகார்

ஆர்பாட்டத்தின் போது காவல்துறை (ஆவணப்படம்)
Image caption ஆர்பாட்டத்தின் போது காவல்துறை (ஆவணப்படம்)

இலங்கையில் காணாமல் போனோரைத் தேடி கண்டறியும் குழுவினர், சர்வதேச மனித உரிமைகள் தினமன்று தாம் நடத்திய கவனஈர்ப்பு போராட்டத்தின் போது காவல்துறை பக்கசார்பாக நடந்துகொண்டதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வியாழனன்று முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.

சர்வதேச மனிதஉரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதி திருகோணமலையில் காணாமல் போனோரை தேடி கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது சிங்கள மொழியில் பேசிய குழுவொன்றினால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் காணாமல் போனோரைத் தேடி கண்டறியும் குழுவின் தலைவரான சுந்தரம் மகேந்திரன் உட்பட சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சையும் பெற்றிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காணாமல் போனோரை தேடி கண்டறியும் குழுவினால் இன்று தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவில் திருகோணமலை காவல்துறைக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் அங்கு கடமையிலிருந்த காவல்துறை பாராமுகமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிபிசி தமிழோசையுடன் பேசிய காணால் போனோரை தேடி கண்டறியும் குழுவின் தலைவரான சுந்தரம் மகேந்திரன் திருகோணமலை காவல் நிலையத்திற்கு முறைப்பாடு பதிவு செய்வதற்காக சென்றிருந்தபோது தாம் அச்சுறுத்தப்பட்டதாக தெரிவித்தார். தமிழ் மக்களை ஓன்றிணைத்து சிங்கள மக்களுக்கு எதிராக இனவாதத்தை தூண்டி பிரச்சினைகளை ஏற்படுத்த தாம் முற்படுவதாக நீதிமன்றத்தில் தம் மீது வழக்கு தொடரப்படும் என்றும் வேண்டுமானால் நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்றும் கூறி காவல்நிலைய பொறுப்பதிகாரி தம்மை அச்சுறுத்தியதாக தெரிவித்தார் அவர்.

Image caption ஆர்பாட்டத்தின்போது காவல்துறை (ஆவணப்படம்)

கடந்த 20ஆம் தேதி காவல்துறை மா அதிபதி காரியாலயத்தில் காவல்துறை பக்க சார்பாக நடந்து கொண்டமை மற்றும் தனக்கு விடுத்த அச்சுறுத்தல் தொடர்பான முறைப்பாட்டை தாம் செய்தபோதிலும் அதன்மீது இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதன் காரணமாகவே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் இன்று முறைப்பாடு செய்ததாகவும் அவர் கூறினார்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் நடைபெற்ற தம்முடைய போராட்டத்தில் தங்கள் மீது தொடரப்பட்ட வன்முறைகளுடன் தொடர்பானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும் காவல்துறை பக்க சார்பாக நடந்து கொண்டமை தொடர்பாக விசாரணை நடைபெற வேண்டும் என்றும் இதுவே தமது கோரிக்கை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது எழுத்து மூல மனுவை பெற்றுக் கொண்ட இலங்கை மனித உரிமைகள் ஆணையகத்தின் அதிகாரிகள், இரு தரப்பையும் பிறிதொரு நாளில் அழைத்து இது தொடர்பான விசாரணையை நடத்துவோம் என்று தம்மிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.