வலி. கிழக்கு வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டது

தமிழரசுக் கட்சியின் பொறுப்பில் உள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் ஆளும் கட்சி உறுப்பினர்களினாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகளாகிய தமிரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கட்சி முரண்பாடு காரணமாகவே இவ்வாறு தோற்கடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டப் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தவர்களில் ஒருவராகிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா துரைராஜா இது குறித்து கருத்து வெளியிட்டபோது, சபையின் தலைவராகிய ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த அன்னலிங்கம் உதயகுமார் தனக்கு ஆதரவாக உள்ள சிலரை வைத்துக் கொண்டு செயற்படுவதாகவும், அவர் ஏனைய கட்சிகளாகிய தமிழரசுக் கட்சி மற்றும் ஆளும் மக்கள் ஐக்கிய முன்னணி சார்பிலான ஈபிடிபி கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களுடைய ஆலோசனைகளைப் பெறாமல் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்ததுடன், தாங்கள் தெரிவித்த திருத்தங்களை உள்ளடக்காத காரணத்தினாலேயே இரண்டு தடவைகளிலும் வரவு செலவுத் திட்டத்திற்குத் தாங்கள் எதிராக வாக்களித்து அதனைத் தோற்கடித்ததாகத் தெரிவித்தார்.

அத்துடன், சபையின் அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து ஒன்றிணைத்து சபையை நடத்திச் செல்லக்கூடிய ஆளுமையுள்ள ஒரு தலைவரைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் புதிதாகத் தெரிவு செய்து அவரைக் கொண்டு சபையை முன்னோக்கி நடத்திச் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பூசல்கள், முரண்பாடுகள் காரணமாகவே வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது என கூறப்படுவதை ஏற்க முடியாது என்றும் உறுப்பினர் துரைராஜா தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழுள்ள பிரதேச சபைகள் சிலவற்றில் இவ்வாறான உட்கட்சிப் பூசல்கள் காரணமாக முதல் தடவையில் வரவு செலவுத் திட்டப் பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்டிருந்தன.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சபை உறுப்பினர்களே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு மீறி செயற்படுபவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவது உட்பட அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழரசுக் சட்சியின் செயலாளரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா, மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்தியிருந்த நிலையிலேயே வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாக இவ்வாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.