இலங்கையில் 3 தேவாலயங்கள் மீது தாக்குதல்

தாக்கப்பட்ட தேவாலயம் ஒன்று
Image caption தாக்கப்பட்ட தேவாலயம் ஒன்று

இலங்கையின் தென்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்று தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக கிறிஸ்தவக் குழுக்கள் கூறியுள்ளன.

எவருக்கும் காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும், தேவாலயம் ஒன்றைச் சேர்ந்த ஒருவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தேவாலயங்களின் குறைந்தது இரண்டின் மீதான தாக்குதலிலாவது கடும்போக்கு பௌத்த மதகுருமாரும் கலந்து கொண்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

இலங்கையின் தெற்கே ஹிக்கடுவை பகுதியில் உள்ள மூன்று தேவாலயங்கள் மீதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

குறைந்தபட்சம் 200 பேர் கொண்ட கும்பல் 20க்கும் அதிகமான பௌத்த மதகுருமார் தலைமையில் தமது வழிபாட்டின் போது வந்து, இரு தேவாலயங்களை அடுத்தடுத்து தாக்கியதாக அந்த தேவாலயங்களின் போதகர்கள் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

ஜன்னல்கள், இசை உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்களை அவர்கள் அடித்து நொருக்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு சம்பவங்களிலும் வழிபாட்டாளர்கள் தப்பிவிட்டார்கள்.

கொலை மிரட்டல்

ஒரு பௌத்த மதகுரு தன்னை இழிவான வார்த்தைகளால் திட்டி, கொன்றுவிடப்போவதாக மிரட்டியதாக அஸம்பிளி ஆஃப் காட் திருச்சபையைச் சேர்ந்த மதபோதகரான பாஸ்டர் சிந்தக பிரசன்ன பிபிசியிடம் கூறினார்.

தம்மீது சனிக்கிழமை இரவே தாக்குதல் நடக்கலாம் என்று பொலிஸார் எச்சரித்திருந்ததாகவும், சம்பவம் நடந்தபோது பொலிஸார் ஸ்தலத்தில் இருந்தாலும், அவர்கள் பௌத்தகுருமாரைத் தடுக்க எதுவும் செய்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

பொலிஸாரின் செயற்படாமையை ஒப்புக்கொண்ட இலங்கை பொலிஸ்தரப்பு பேச்சாளரான அஜித் றோகண அவர்கள், பொலிஸ்குழு மிகவும் சிறியதாக இருந்ததாகவும் கூறினார்.

சம்பவம் குறித்த வீடியோக்கள் ஆராயப்பட்டு சட்டத்தை மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

தமது தேவாலயங்களை மூடுமாறு அரசாங்க அதிகாரிகள் தம்மை அண்மையில் கேட்டதாகவும், ஆனால், அது குறித்த சட்ட நடவடிக்கையில் தாம் இருப்பதாகவும் தேவாலய நிர்வாகங்கள் கூறுகின்றன.

தலைநகருக்கு அருகில் உள்ள இன்னுமொரு தேவாலயத்துக்கும் கடந்த இரவு ''தீ'' வைக்கப்பட்டதாகவும், ஆனாலும் ''தீ'' பெரிதாகப் பரவுவதற்கு முன்னதாக அது அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கிறிஸ்தவ அமைப்பு ஒன்று கூறுகின்றது.

சிங்கள பௌத்த தேசியவாதம் மீண்டும் தீவிரமாகிவரும் நிலையில், சிறிய, சுயாதீன தேவாலயங்கள் மீதான தாக்குதல்கள் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன என்றும் பெரும்பாலும் தேசிய ஊடகங்களில் அவை குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை என்றும் எமது செய்தியாளர் கூறுகிறார்.