மன்னார் மனித புதைகுழியில் மேலதிக மனித உடல்கள் கண்டுபிடிப்பு

மன்னார் மனிதபுதைகுழி
Image caption மன்னார் மனிதபுதைகுழி

இலங்கையின் வடமேற்கே மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலய சூழலில் மாந்தைசந்திக்கு அருகில் கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியைத் தோண்டும் பணிகள் எட்டாவது தடவையாக வியாழனன்று மேற்கொள்ளப்பட்டபோது மேலும் நான்கு மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அனுராதபுரம் விசேட சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் தனஞ்சய வைத்தியரத்ன செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டவை தவிர்த்து, ஏற்கெனவே இருபத்தேழு மனித உடல்களுக்குரிய பாகங்கள் இதுவரை இந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

"இருப்பினும் அந்த எண்ணிக்கை சரியானதா என்பது தெரியவில்லை. ஏனெனில் இந்த மனித புதைகுழி முழுமையாகத் தோண்டி முடிக்கப்படுவதற்கு முன்னர் சரியான எண்ணிக்கை குறித்த தகவல்களை என்னால் கூற முடியாது. புதைகுழியைத் தோண்டும் பணிகள் நாளையும் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். திருக்கேதீஸ்வரம் ஆலயத் திருவிழாவுக்கு முன்னர் இந்தப் பணிகளை முடித்து, இந்த வீதியைப் பயன்படுத்துவதற்காகக் கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றோம்" என்றார் மருத்துவர் தனஞ்சய வைத்தியரட்ன.

கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரட்னம் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டது. ஜனவரி மாதம் 3, 4 ஆம் திகதிகளிலும், பின்னர் 6, 7 ஆம் திகதிகளிலும், புதைகுழி தோண்டும் பணிகள் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிகள், காவல்துறையினர் முன்னிலையில் நடைபெற்றதன் பின்னர், இன்று வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று வரையில் 36 மனித மண்டையோடுகள் உள்ளிட்ட மனித எலும்பு தொகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடல்பெற்ற தலமாகிய திருக்கேதீஸ்வரம் கோவில் சூழலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மனித புதைகுழி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.