சென்னை மீனவர் சந்திப்பு 27-ம் திகதிக்கு ஒத்திவைப்பு

Image caption இலங்கை அமைச்சருக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு அறிவித்துள்ளது

இலங்கை இந்திய மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக சென்னையில் எதிர்வரும் 20-ம் திகதி நடத்தப்படவிருந்த இருதரப்பு மீனவர் பேச்சுவார்த்தைகள் 27-ம் திகதியே நடக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைத் தரப்பு மீனவர் பிரதிநிதிகள் கலந்துகொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சு தமிழக முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படியே, பேச்சுவார்த்தை திகதி ஒருவாரத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வரின் அறிக்கை கூறுகிறது.

முன்னதாக, ஜனவரி 20-ம் திகதி சென்னை பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பில்லை என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, இந்த வாரத்தின் முற்பகுதியில் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார்.

வெளியுறவு அமைச்சு ஊடாக தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் பத்திரிகைகள் வாயிலாகவே சென்னை பேச்சுவார்த்தை பற்றி அறிந்துகொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியிருந்தார்.

இருதரப்பு மீனவர் பிரச்சனையை தீர்க்கமுடியாதபடி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவே தடைக்கல்லாக இருப்பதாகவும் ராஜித்த சேனாரத்ன பிபிசியிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த நிலையிலும், ஐனவரி 20-ம் திகதி பேச்சுவார்த்தை நடக்கும் என்றே இந்திய அரச மட்டத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பின்னணியில், தில்லியில் அமைச்சர்கள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு 17-ம் திகதி நாடுதிரும்பிய இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர், 27-ம் திகதி-சென்னை பேச்சுவார்த்தைக்காக 20 பிரதிநிதிகளை தயார்செய்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் ஆலோசகர் எஸ்.பி. அந்தோனிமுத்து பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தச் செய்தி குறித்து மேலும்