'காணாமல்போனோர் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்'

முன்னர் ஆணைகுழுவிடம் காணாமல் போனோர் குறித்து முறைப்பாடுகளைச் செய்தபோது எடுக்கப்பட்ட படம்
Image caption முன்னர் ஆணைகுழுவிடம் காணாமல் போனோர் குறித்து முறைப்பாடுகளைச் செய்தபோது எடுக்கப்பட்ட படம்

இலங்கையின் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு தனது முதற்கட்ட விசாரணைகளை சனியன்று கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பாடசாலையில் ஆரம்பித்திருக்கின்றது.

கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழு விசாரணைகளை நடத்தும் என அறிவிக்கப்டட்டிருக்கின்றது.

இதற்கமைவாக இந்த ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே 13, 000 பேர் காணாமல் போயுள்ளமை தொடர்பாக எழுத்து மூலமான முறைப்பாடுகளைச் செய்திருக்கின்றார்கள்.

இந்த முதற்கட்ட விசாரணைகளில் 36 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களுடைய சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஆயினும் 84 பேர் சாட்சியமளிப்பதற்காக வருகை தந்திருந்ததாக இந்தக் குழுவின் செயலாளர் ஏ.டபிள்யூ. குணதாச தெரிவித்திருக்கின்றார்.

அழைக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் மாத்திரம் பதிவு செய்யப்படும் என்றும், தன்னைப் போன்று அழைக்கப்படாத இடங்களில் இருந்து வந்திருந்தவர்களுக்கு வேறு ஒரு திகதியில் சந்தர்ப்பம் அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததாக பூநகரியைச் சேர்ந்த குமாரசாமி செல்வராசா தெரிவித்தார்.

Image caption காணாமல் போனவர்களின் உறவினர்கள்

காணாமல் போயிருந்த தனது மகன் வேறு சில இளைஞர்களுடன், கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்ட நிலையில் பஸ் ஒன்றில் இராணுவத்தினரால் ஏற்றிச் செல்லப்படுகையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத் தளம் ஒன்றில் வெளியாகியிருந்ததாகவும், அந்தப் படத்தையும் ஏனைய ஆவணங்களையும் கொண்டு தனது மகனைப்பற்றிய தகவல்களை ஆணைக்குழுவினரிடம் தெரிவித்து விளக்கம் கேட்பதற்காக இந்த விசாரணை நடைபெற்ற இடத்திற்கு சென்றிருந்தாக அவர் தெரிவித்தார்.

குமாரகுலசிங்கம் இந்திராதேவி என்ற தாயார் தனது மகன் கடைக்குச் சென்றபோது காணாமல் போயிருந்ததாகவும், 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வியாபாரத்திற்காக வவுனியா சென்றவர்களுடன் ஓமந்தை சோதனைச்சாவடியில் வைத்து காணப்பட்டதாகவும், அவரைப்பற்றிய விபரங்களைத் தெரிவித்து அவர் இருக்குமிடத்தைக் கண்டறிவதற்காக நம்பிக்கையோடு இந்த ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்காக வந்திருந்ததாகத் தெரிவித்தார்.

இந்த விசாரணைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஆணைக்குழுவின் செயலாளர் ஏ.டபிள்யூ குணதாச அவர்கள், விசாரணைகளில் சாட்சியமளிப்பதற்காக 84 பேர் வருகை தந்திருந்ததாகவும், அழைக்கப்பட்டிருந்தவர்களிடம் முதலில் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் நான்கு நாட்களுக்கு இந்த விசாரணைகள் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளினாலும் மற்றும் இராணுவம் பொலிசாரினாலும் தங்களுடைய உறவினர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்று விசாரணைகளில் சாட்சியமளித்தவர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். எங்களுக்குக் கிடைத்துள்ள 13, 000 முறைப்பாடுகளில், இராணுவத்தினர் 5000 பேர் காணாமல் போயிருப்பதாக அவர்களுடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றார்கள் என்றார் குணதாச.