இலங்கை மீனவர் குழு சென்னை சென்றடைந்தது

இலங்கை- இந்திய மீனவர் கூட்டம் ஒன்று ( ஆவணப்படம்) படத்தின் காப்புரிமை NAFSO
Image caption இலங்கை- இந்திய மீனவர் கூட்டம் ஒன்று ( ஆவணப்படம்)

இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சினைகள் குறித்து, நாளைக் காலை சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று காலை சென்னையைச் சென்றடைந்துள்ளார்கள்.

அண்மையில் இந்தியத் தலைநகராகிய புதுடில்லியில் நடைபெற்ற இரு நாட்டு அரச உயர்மட்டத்தினருடனான முதற்கட்டப் பேச்சுக்களில் சமூகமளிதிதிருந்த பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக குறிப்பாக மன்னாரில் இருந்து இரண்டு பேர் இந்தக் குழுவில் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர் மீனவர் சங்கப் பிரதிநிதி. மற்றவர் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் அதிகாரியாவார்.

நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் என்னென்ன விடயங்கள் பேசப்பட வேண்டும் என்பது தொடர்பில் புதுடில்லி பேச்சுக்களுக்குப் பின்னர் கொழும்பில் அதிகாரிகள் மட்டத்திலும் வடக்கில் மாகாண மட்டத்திலும் ஆலோசனைகள் நடத்தப்பட்டிருப்பதாக சென்னைக்குப் பயணமாவதற்கு முன்னார் மன்னாரைச் சேர்ந்த பிரதிநிதி அல்பர்ட் ஜஸ்டின் சொய்சா பிபிசியிடம் கூறினார்.

''கச்சதீவு பற்றிய பேச்சுக்களில் பங்கெடுக்கத் தேவையில்லை. எல்லை தாண்டிய மீன்பிடி தொழிலுக்கு இடமில்லை. அதற்கு ஒப்புக்கொள்ள வேண்டாம்'' என்று திட்டவட்டமாக இந்தப் பேச்சுக்களில் தெரிவிக்குமாறு வடபகுதி மீனவர்கள் தங்களிடம் தெரிவித்திருப்பதாகவும், வடபகுதி மீனவர்கள் மீன்பிடி தொழிலில் எதிர்நோக்கியுள்ள கஸ்டங்களைத் தெளிவாக தமிழகப் பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறுமாறும் தங்களிடம் கூறியிருப்பதாகவும் ஜஸ்டின் சொய்சா தெரிவித்தார்.

இதேவேளை, புதுடில்லியில் நடைபெற்ற முதற்கட்ட உயர் மட்டப் பேச்சுக்களில் எல்லை தாண்டி மீன்பிடிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தரப்பினர் இந்தியத் தரப்பினருக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர். இதுவிடயத்தில் இருதரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே இதனடிப்படையில் சென்னை பேச்சுவார்த்தைகளில் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழி பிறக்கும் என்று ஜஸ்டின் சொய்சா சென்னை பயணம் குறித்து நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

இதேவேளை, இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் ஆரம்பகாலந்தொட்டு செயற்பட்டு வந்த மீனவர் அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகளை இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் புறந்தள்ளியிருப்பதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத் தலைவர் கந்தவனம் சூரியகுமாரன் கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுக்கள், நடைபெறவுள்ள சென்னைப் பேச்சுக்கள் என்பன குறித்து எவருமே தங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்றும் சூரியகுமாரன் கூறியுள்ளார்.

''தமிழக மீனவர்கள் தொடர்பில் தமிழக அரசு அதிக அக்கறை செலுத்திச் செயற்பட்டு வருகின்ற போதிலும், புதிதாகப் பதவியேற்றுள்ள வடமாகாண சபையினர் தமது மீனவர்கள் குறித்து அக்கறை செலுத்தவில்லை. மௌனம் சாதித்து வருகின்றனர்'' என்றும் சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.