ஊடகவியலாளர் மெல் குணசேகர கொலை: சந்தேகநபர் கைது

படத்தின் காப்புரிமை Mel Gunasekera
Image caption மெல் குணசேகர

இலங்கையின் முன்னணி பெண் ஊடகவியலாளர்களில் ஒருவரான மெல் குணசேகர குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

ஊடகவியலாளர் மெல் குணசேகரவின் கைத் தொலைபேசியை குறித்த சந்தேகநபர் வைத்திருந்ததாக பொலிசார் பிபிசியிடம் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகள் நடைபெற்றுவருகின்றன.

மெல் குணசேகரவின் சடலம் கூரிய ஆயுதமொன்றால் குத்தப்பட்ட காயங்களுடன் கொழும்பிலுள்ள அவரது வீட்டிலிருந்து மீட்கப்பட்டது.

இலங்கையின் போர்க்காலத்தில் ஏஎஃப்பி செய்திச் சேவைக்காக ஊடகவியலாளர் மெல் குணசேகர கொழும்பிலிருந்து பணியாற்றினார்.

ஊடகத் தொழில் காரணமாகத் தான் அவர் கொல்லப்பட்டாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

கொலையாளியை கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு துப்பு கிடைத்திருப்பதாக இலங்கை பொலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி அஜித் ரோஹண முன்னதாக பிபிசியிடம் தெரிவித்தார்.

'எங்களுக்கு துப்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக, கைவிரல் அடையாளம் ஒரு துப்பாகக் கிடைத்துள்ளது. அதேநேரம், அவரது வீட்டுக்கு அண்மித்த வீட்டிலிருந்த பாதுகாப்பு சிசிடிவி கெமரா மூலம் ஒரு நபர் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது' என்றார் அஜித் ரோஹண.

இலங்கையில் கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். சிலர் கடத்தப்பட்டனர். பலர் தாக்கப்பட்டுள்ளனர். அவற்றுக்குப் பொறுப்பாளிகள் யார் என்று அதிகாரிகள் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

ஊடகவியலாளர்கள் அச்சத்தில்

Image caption ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல்போய் 4 ஆண்டுகள் கடந்துவிட்டன

இந்த நிலையில், ஊடகவியலாளர்களை இலக்குவைத்து இப்படியான கொலைகள் தொடர்ந்தும் நடக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளதாக இலங்கை சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பாட்டாளர் சுனில் ஜயசேகர கூறுகிறார். 'கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட அபாயகரமான சூழ்நிலைகளைக் கருத்தில் எடுத்துப் பார்க்கும்போது, இந்தக் கொலை எமக்கு இன்னும் அச்சத்தைத் தான் ஏற்படுத்துகிறது. எனவே இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை அவசரமாக கண்டுபிடிக்க வேண்டிய முக்கிய பொறுப்பு காவல்துறைக்கு உள்ளது. இந்த சம்பவத்தின் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை காவல்துறை இந்த உலகுக்கும் நாட்டுக்கும் ஊடகத்துறையினருக்கும் தெளிவுபடுத்த வேண்டும்' என்றார் சுனில் ஜயசேகர.

இலங்கையில் வணிக மற்றும் பொருளாதாரத் துறைச் சம்பந்தப்பட்ட செய்திகளை வழங்கும் ஊடகவியலாளர்களுக்கு கடந்த காலங்களில் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையையும் சுனில் ஜயசேகர பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.

40 வயதான ஊடகவியலாளர் மெல் குணசேகர, உயிரிழக்கும்போது ஃபிட்ச் ரேட்டிங்ஸ் லங்கா (Fitch Ratings Lanka) என்ற நிறுவனத்தின் உதவி துணைத் தலைவராக இருந்தார்.

இலங்கையின் முன்னணி ஊடக நிறுவனங்கள் சிலவற்றில் வணிகத்துறை செய்தியாளராகவும் அவர் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.