ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யானைகளைத் தடுக்க பனைமர வேலி: இலங்கையில்

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களை தடுக்கும் வகையில், இலங்கையில் புதிய வகையான ஒரு முன்னெடுப்பு வெற்றி பெற்றுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றானர்.

Image caption சோதனை முயற்சியில் அமைக்கப்பட்ட ஒரு பனைமர வேலி.

பனைமரங்களைக் கொண்டு வேலியை அமைப்பதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கும் யானைகள் வருவதை நிரந்தரமாகத் தடுக்க முடியும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட இலங்கையின் ஜனதாக்ஷன் எனும் அமைப்பும் பிரிட்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் பிராக்டிகல் ஆக்ஷன் எனும் அமைப்பும் தெரிவித்துள்ளன.

முட்கம்பி வேலிகள், மின்சார வேலிகளைவிட இயற்கையாக பனைமரங்களைக் கொண்டு அமைக்கப்படும் வேலி மிகவும் செலவு குறைந்தது, பராமரிப்பு செலவுகள் அற்றது மற்றும் நூறு ஆண்டுகள் வரை நீடித்திருக்கக் கூடியது என்று இந்த முன்னெடுப்பின் திட்ட இயக்குநர் லாஃபிர் மொஹமட் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

Image caption எட்டு ஆண்டுகளுக்கு பிறகு வேலி எப்படி இருக்கும் என்று காட்டும் வரைபடம்.

இலங்கையில் நான்கு இடங்களில் சோதனை முறையில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்றும் இதையடுத்து நாடெங்கும் யானைகள் நடமாடும் கிராமங்களை ஒட்டிய பகுதிகளில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

குறுக்கு நெடுக்காக பனை மரங்களை நடுவதன் மூலம், அந்த மரங்கள் செறிந்து நெருங்கி வளரும்போது, யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் வருவதை தடுப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றுக்கு உணவுக்கும் வழி செய்யும் எனவும் லாஃபிர் மொஹமட் சுட்டிக்காட்டினார்.

Image caption பனம்பழத்தை விரும்பிச் சாப்பிடும் ஒரு யானை

பனைமரங்கள் முற்றாக வளர்ந்து முழுமையான பாதுகாப்பை அளிப்பதற்கு எட்டு வருடங்கள் ஆகும் என்றாலும், அதுவரை மின்சார வேலிகள் அல்லது முட்கம்பி வேலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் எனவும், மரங்கள் வளர வளர, சிறிது சிறிதாக அந்த வேலிகளை அகற்ற முடியும் எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கையில் ஆண்டொன்றுக்கு சராசரியாக ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் யானைகளின் தாக்குதல் காரணமாக உயிரிழக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.