திருகோணமலை கத்தோலிக்க போதனை நிலைய காணி "விமானப்படையிடம்"

வரைபடத்தில் திருகோணமலை படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption வரைபடத்தில் திருகோணமலை

திருகோணமலை பிரதேசத்தில் கத்தோலிக்க போதனை நிலையம் ஒன்று அமைந்துள்ள காணியை இலங்கை விமானப்படை கையகப்படுதியிருப்பதை ரத்து செய்யுமாறு கோரி அந்நாட்டின் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த போதனை நிலையத்தின் தலைவர் பாதிரியார் டாக்டர் ஜெயராஜ் ராசையா மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தமது கத்தோலிக்க போதனை நிலையம் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக விமானப் படையினர் தமது காணியை கையகப்படுத்தியுள்ளதாகவும், அக்காணிக்குள் தாம் வருவதை விமானப்படையினர் தடுத்து வருவதாகவும் பாதிரியார் டாக்டர் ஜெயராஜ் ராசையா புகார் தெரிவித்துள்ளார்.

நியாயமான காரணமின்றி தமது காணி கையகப்படுத்தப்பட்டதை எதிர்த்து விமானப்படை அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும் உரிய பதில் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.

தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளபடியால், இக்காணியை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்கச்சொல்லி இலங்கை விமானப்படைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு டாக்டர் ஜெயராஜ் ராசையா நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.