கல்முனை வீதிப் பெயர் தொடர்பில் தமிழர்கள் முஸ்லிம்கள் இடையே சர்ச்சை

கல்முனை தரவை பிள்ளையார் கோயிலின் பெயரால் வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளது.
படக்குறிப்பு,

கல்முனை தரவை பிள்ளையார் கோயிலின் பெயரால் வீதிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கையில் அம்பாரை மாவட்டம் கல்முனை நகரப் பிரதேசத்திலுள்ள வீதியொன்றின் பெயர் தொடர்பில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் சர்ச்சை எழுந்துள்ளது.

ஏற்கனவே தரவை பிள்ளையார் ஆலய வீதி என பெயரிடப்பட்டுள்ள வீதிக்கு கடற்கரை பள்ளிவாசல் வீதி என பெயர் சூட்டுவதற்கு கல்முனை மாநகர சபையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த பெயர் மாற்ற முயற்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், தரவைப் பிள்ளையார் கோயில் வீதியின் பெயரை எக்காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என்று கோரியும் திங்கட்கிழமையன்று கல்முனை நகரில் தமிழ் மக்கள் கலந்து கொண்ட கவனயீர்ப்பு பேரணியொன்று நடைபெற்றது.

கல்முனை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையிலுள்ள தரவை பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து கல்முனை மாநகரசபை மற்றும் முஸ்லிம் பிரிவிற்கான பிரதேச செயலகம் வழியாக தமிழ் பிரிவிற்கான பிரதேச செயலகம் வரையில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் பெண்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் தங்கள் எதிர்ப்பையும் கோரிக்கையும் வலியுறுத்தும் வாசக அட்டைகளுடன் கலந்துகொண்டார்கள்.

படக்குறிப்பு,

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலின் பெயரை வீதிக்கு வைக்கச்சொல்லி மனு அளிக்கப்பட்டுள்ளது.

கல்முனை ஆலயங்கள் மற்றும் பொதுமக்களின் ஒன்றியம் என்ற அமைப்பினால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த பேரணியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான த. கலையரசன் , மு. இராஜேஸ்வரன் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளும் கலந்துகொண்டு தமது ஆதரவை தெரிவித்திருந்தனர்.

பேரணி முடிவில் ஏற்பாட்டாளர்களினால் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி மற்றும் தமிழ், முஸ்லிம் பிரதேச செயலாளர்களிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

கல்முனை தரவை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாகவுள்ள இந்த வீதி 50–60 வருடங்களுக்கு மேலாக தரவை பிள்ளையார் வீதி என்றே அழைக்கப்பட்டு வருகின்றது.

கடற்கரை பள்ளிவாசலில் முடிவடையும் இந்த வீதியில் தற்போது தமிழர்களின் குடியிருப்புகளோ அல்லது காணிகளோ இல்லை. முஸ்லிம்கள் மட்டுமே வசித்து வருவதால், அவர்கள் தங்களது தொடர்புகள் இடையே இவ்வீதியை கடற்கரை பள்ளிவாசல் வீதி என்றே குறிப்பிட்டு வருகின்றார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.