வடமாகாண ஆட்சியாளர்களுடன் ஐ நா அதிகாரி சந்திப்பு

Image caption வட மாகாண ஆளுநருடன் ஐ நா வின் துணைத் தலைமைச் செயலர்

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் குறிப்பாக வடமாகாணத்தில் கூடிய அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கும், அதன் மூலம், அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளைப் போக்குவதற்கும் விருப்பம் கொண்டுள்ளதாக ஐ நா வின் உயரதிகாரி கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு பயணம் விஜயம் செய்த ஐநா மன்றத்தின் துணைத் தலைமைச் செயலரும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் ஐநாவின் அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குநனருமான ஹாயோ யிங் சூ வட மாகாண முதலமைச்சரிடம் இதைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கையின் வட மாகாணம் உட்பட பல பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளில் ஐ நா கூடுதலாக ஈடுபட முடியும் எனவும், அதற்காக ஆராய்வதற்காவே இந்தப் பயணத்தை தான் மேற்கொண்டதாக சூ அவர்கள், முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கூறியுள்ளார்.

தங்களால் முடிந்த அளவில் அபிவிருத்தி நடவடிக்கைகளிலே அரசுக்கும் வடமாகாண சபைக்கும் இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குத் தான் முனைவதாக ஐநா அந்த உயரதிகாரி தம்மிடம் தெரிவித்தாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Image caption வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் ஹாயோ யிங் சூ

வட மாகாணம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வேண்டுமென்று ஐ நா வின் துணைத் தலைமைச் செயலரிடம் தான் வற்புறுத்தியுள்ளதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதேவேளை தமது தரப்பிலிருந்து ஐ நா அதிகாரியிடம் எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்பதையும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, ஹாயோ யிங் சூ வட மாகாண ஆளுநர் மற்றும் அரச அதிகாரிகளையும் சந்தித்து பேசியுள்ளார்.