இலங்கை சர்வதேசத்தின் நம்பிக்கையைப் பெற வேண்டும்: இந்தியா

இலங்கை சர்வதேச அரங்கில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டும் என இந்தியா கூறியுள்ளது.

Image caption இலங்கை ஊடகவியலாளர்களை புது டில்லியில் சல்மான் குர்ஷித் சந்தித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரவுள்ளத் தீர்மானம் மீது இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது இன்னும் தெரியவில்லை.

கொழும்பிலிருந்து சென்றிருந்த ஊடகவியலாளர்கள் குழுவொன்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷிதை புதன்கிழமை டில்லியில் சந்தித்து பேசியபோதே சல்மான் குர்ஷித் இலங்கை மனித உரிமைகள் நிலவரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு சர்வதேச சமூகத்தில் நிலவ வேண்டுமாயின், அதற்கு ஏற்ற வகையில் திருப்திகரமான முன்னேற்றங்களை இலங்கை காண்பிக்க வேண்டியது அவசியம் என்று குர்ஷித் கூறியதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த பத்திரிகையாளர் என் எம் அமீன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதேவேளை சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படுவதற்கு இந்தியா இடமளிக்காது என்று சல்மான் குர்ஷித் கூறியதாக அமீன் தெரிவித்தார்.

இலங்கையில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தேர்வுக் குழு அனைத்து தரப்பினரின் நம்பிக்கையை பெறும் வகையில் இருக்க வேண்டும் என்றும், அந்தக் குழுவின் நம்பகத்தன்மை குறித்து பிரச்சினைகள் உள்ளன என்றும் இந்திய அமைச்சர் சுட்டிக்காட்டியதாகவும் அமீன் கூறுகிறார்.

இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வந்து இறங்கியவுடன் விசாவைப் பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் இலங்கையர்களுக்கு வழங்குவதில் பாதுகாப்புத் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்றன என்று சல்மான் குர்ஷித் இலங்கை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளதாகவும் அமீன் தெரிவித்தார்.

எனினும் இந்தக் கூட்டத்தில் இரு நாட்டு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.