காணாமல் போனவர்கள்: யாழில் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்

காணாமல்போனவர்களின் உறவினர்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்கின்றனர்
Image caption காணாமல்போனவர்களின் உறவினர்கள் முறைப்பாடுகளைத் தெரிவிக்கின்றனர்

இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் நான்கு நாள் விசாரணைகளை வெள்ளியன்று ஆரம்பித்துள்ளது.

கோப்பாய் பிரதேச செயலகத்தில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது விடுதலைப்புலிகளின் மருததுவ பிரிவில் பணியாற்றிய ரேகா என்றழைக்கப்படும் மகேந்திரராசாவை இறுதி யுத்தம் முடிவுக்கு வந்தபோது இராணுவத்தினரிடம் கையளித்த அவரது மனைவி மற்றும் உள்ளுர் பத்திரிகைச் செய்தியாளர் ஒருவர் உட்பட பலர் சாட்சியமளித்திருக்கின்றனர்.

இராணுவத்தினரிடம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் தன்னால் ஒப்படைக்கப்பட்ட தனது கணவன் ரேகா என்றழைக்கப்படும் மகேந்திரராசாவை சட்டத்தின் முன் நிறுத்தி விடுதலை செய்ய வேண்டும் என்று அவருடைய மனைவி துளசிகா இந்த ஆணைக்குழுவினர் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் கோரியிருக்கின்றார்.

வெள்ளவாயா பகுதியில் வர்த்தக நிலையமொன்றில் பணியாற்றியபோது வீட்டிற்குப் பணம் அனுப்பிவிட்டுச் சென்ற தனது மூத்த சகோதரன் சிவஞானம் பார்த்திபன் என்பவர் காணாமல் போனதாகவும், பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிசார் மூலமாக அவர் பணியாற்றிய வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் இன்று வரையில் விடுதலை செய்யப்படவில்லை என்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உள்ளுர் செய்தியாளராகிய சிவஞானம் செல்வதீபன் என்பவரும், அவருடைய தாயாரும் இந்த ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தனது சகோதரனைப் பார்ப்பதற்காகச் சென்ற தன்னையும் மட்டக்களப்பில் இருந்த கருணா குழுவினர் கைது செய்து சித்திரவதையுடன் கூடிய விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் பெருந்தொகைப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தன்னை விடுதலை செய்ததாக செல்வதீபன் இந்த ஆணைக்குழுவினர் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரனை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன், தனக்கு தொடர்ச்சியாக இராணுவ புலனாய்வினரால் தொல்லை தரப்படுவதாகத் தெரிவித்து அத்தொல்லைகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருப்பதாகத் தெரிவித்தார்.

கோப்பாய் பிரதேசத்தில் உள்ள காணாமல் போனவர்கள் பற்றி 53 பேர் சாட்சியமளிப்பதற்காக முதல் நாள் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளை சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும், அடுத்த இரண்டு தினங்கள் யாழ் செயலகத்திலும் விசாரணைகள் நடைபெறும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.