யாழ். மக்கள் ஆர்ப்பாட்டம்; மன்னார் மக்கள் தடுக்கப்பட்டனர்

Image caption உள்நாட்டில் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைக்காது, சர்வதேச பொறிமுறை அவசியம்: ஆர்ப்பாட்டக்காரர்கள்

இலங்கையின் வடக்கே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்களின் நிலைமை, பொதுமக்களின் காணிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்றல் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியறுத்தி இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலயத்தின் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களும் எழுப்பப்பட்டன.

'ஜனநாயக நாடு என்று சொல்லப்படுகின்ற இந்த நாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் பல பிரச்சனைகளுக்கு மக்கள் முகம் கொடுத்திருக்கின்றார்கள். அவர்கள் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கு ஜனநாயக ரீதியாகப் போராட்டம் நடத்துவதற்குக் கூட தடைகள் விதிக்கப்படுகின்றன' என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் முக்கியஸ்தரான அன்ரனி ஜேசுதாசன் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு நிலைமையில் உள்நாட்டில் பிரச்சினைகளுக்குத் தீரவு காணமுடியாது. ஆகவே, இதனை சர்வதேசம் கவனத்திற்கொண்டு, தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நேரடியாகத் தீர்வு காணும் வகையில் சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று கோரினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட வடமாகாண விவசாயத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், அரசாங்கம் கடைப்பிடித்து வருகின்ற நடவடிக்கைகளின் மூலம் அபிவிருத்தியின் ஊடாக இந்த நாட்டில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த முடியாது. தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இந்த அபிவிருத்தி உதவப் போவதில்லை என்று குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக மன்னார் மாவட்டத்தில் இருந்து மக்கள், மூன்று பஸ் வண்டிகளில் இலுப்பைக்கடவைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சிலநபர்கள் அந்த பஸ் வண்டிகளின் சாரதிகளுக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்ததாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சோதி குரூஸ் தெரிவித்தார்.

மக்களை ஏற்றிக்கொண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்றால் அந்த பஸ் வண்டிகள் எரிக்கப்படும் என்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலையடுத்து குறித்த சாரதிகள் தமது பயணத்தை நடுவழியில் நிறுத்திக் கொண்டு மன்னாருக்கே திரும்பிச் சென்றுவிட்டதாகவும் சோதி குரூஸ் கூறினார்.