ஊழியர்கள் போராட்டத்தால் வாழைச்சேனை காகித ஆலை முடக்கம்

வாழைச்சேனை காகித ஆலை சொற்ப எண்ணிக்கை ஊழியர்களுடன் இயங்கிவருகிறது
படக்குறிப்பு,

வாழைச்சேனை காகித ஆலை சொற்ப எண்ணிக்கை ஊழியர்களுடன் இயங்கிவருகிறது

கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களின் தொடர்ச்சியான பணிப் புறக்கணிப்பு காரணமாக மூன்று வாரங்களுக்கு மேலாக காகித உற்பத்தி தடைப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாத நிலையில், சம்பளத்தை வழங்கக்கோரி ஊழியர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப் புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் 25வது நாளாக தொடர்வதையடுத்தே ஆலையின் உற்பத்தி செயற்பாடுகள் தடைப்பட்டுள்ளன.

60 வருடங்களுக்கு முன்னர் வைக்கோலை மூலப் பொருளாகக் கொண்டு காகித உற்பத்திக்காக ஆரம்பிக்கப்பட்ட வாழைச்சேனை காகித ஆலையில் தற்போது கழிவு கடதாசிகளை மூலப் பொருளாகக் கொண்டு காகித உற்பத்தி நடைபெறுகின்றது.

வெளிநாடுகளிலிருந்து வரும் காகித இறக்குமதி, இயந்திரங்கள் பராமரிப்பின்மை மற்றும் போர்ச் சூழல் காரணமாக ஏற்கனவே ஆலை நஷ்டமடைந்துள்ள போதிலும் சொற்ப எண்ணிக்கை ஊழியர்களுடன் குறிப்பிட்ட வகை கடதாசி இங்கு உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டு சந்தையிலும் விற்பனை செய்யுப்படுகின்றது.

ஏற்கனவே ஆயிரக் கணக்கான ஊழியர்கள் பணியாற்றிய இந்த தொழிற்சாலையில் தற்போது சில நூற்றுக் கணக்கான ஊழியர்களே பணியாற்றினாலும் மாதாந்த சம்பளத்திற்காக அவ்வப்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் தாம் ஈடுபபட வேண்டிய நிலை ஏற்படுவதாக ஊழியர்கள் கவலையும் விசனமும் தெரிவிக்கின்றனர்.

கடந்த மாதம் 20ம் திகதி தொடக்கம் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், இழப்பீட்டுத் தொகை வழங்கி தங்களை சேவையிலிருந்து விலக வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றிடம் ஆலை ஓப்படைக்கப்பட வேண்டும் என என்று கோருகின்றனர்.

காகித ஆலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் அரச வளங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான அமைச்சர் அன்டன் தயாசிறித திசேராவின் பதிலை பெற முயற்சித்தபோது, அமைச்சர் தற்போது நாட்டிற்கு வெளியே தங்கிருப்பதாக அவரது அலுவலகத்திலிருந்து கிடைத்த பதில் மூலம் அறிய முடிந்தது.