கட்டுவலை மீன்பிடித் தடையால் சம்பூர் மீனவர்கள் பாதிப்பு

Image caption சம்பூர் மக்கள் சொந்தக் காணிகளில் குடியேற்றுமாறு கடந்த காலங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர்

திருகோணமலை மாவட்டத்தில், சம்பூர் பிரதேசத்தில் கட்டுவலை மீன்பிடித்தலுக்கு இலங்கை கடற்படையினால் விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சம்பூர் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

சம்பூர் கடல் பகுதியில் கட்டுவலை பாய்ச்சி மீன் பிடித்தலுக்கு தடை விதித்துள்ள கடற்படையினர், சில கட்டுவலைகளை எவ்வித முன்னறிவித்தல்களுமின்றி அகற்றி சேதமாக்கியதோடு ஏனைய வலைகளையும் அகற்றுமாறு தங்களுக்கு அறிவித்துள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

போர்க் காலத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட சம்பூர் பிரதேசத்தில், போருக்குப் பின்னரும் அங்கிருந்து வெளியேறிய குடும்பங்களின் மீள் குடியேற்றம் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளது.

கிளிவெட்டி, கட்டப்பறிச்சான் உட்பட நான்கு இடங்களிலுள்ள தற்காலிக இடைத்தங்கல் முகாம்களிலேயே அந்த பிரதேச மக்கள் தொடர்ந்தும் தங்கியிருக்கின்றனர்.

தமது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றம் தடைப்பட்டுள்ள நிலையில் சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம மீனவர்கள் மூதூர் பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்து தங்களது பாரம்பரிய தொழிலான கட்டுவலை மீன் பிடித்தல் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

கட்டுவலை மீன்பிடித் தொழில் சட்டவிரோத மீன்பிடி முறையாக இல்லாத போதிலும் கடற்படையினரால் விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடை காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலையடைந்துள்ளனர்.

கட்டுவலை மீன் பிடித்தலுக்கு தடை விதித்துள்ள கடற்படையினரால் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான மீன்பிடி வலைகளும் வெட்டி சேதப்படுத்தப்பட்டுள்ளன.

தங்களது கப்பல் போக்குவரத்துக்கு தடையாக இருப்பதால் தான் இந்தத் தடை என கடற்படையினால் கூறப்படுவது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

இது தொடர்பில் இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளரான காமாண்டர் கோசல வர்ணகுலசூரியவை தொடர்புகொண்டு கேட்டபோது இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு இதுவரை அறிக்கை கிடைக்காத காரணத்தினால் இது பற்றி உடனடியாக எதுவும் கூற முடியாது என பதில் அளித்தார்.

என்றாலும் சட்டவிரோத மீன்பிடித்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.