ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"சாந்தனைப் பார்த்து 25 வருஷமாச்சி; அவரைப் பார்க்க ஆசையா இருக்கு"

Image caption சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மரணதண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள ஒருவரான சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரி தனது மகனை கடந்த 25 ஆண்டுகளாகப் பார்க்கவில்லை என்றும், அவரை உடனடியாக பார்க்க விரும்புவதாகவும் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமது மகனின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்த நீதிபதிகள் மற்றும் அதற்காக போராடியவர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இப்போது இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் மரண தண்டனையிலிருந்து தப்பியுள்ள சாந்தனை தான் கடந்த 25 ஆண்டுகளாகத் தொலைக்காட்சியில் காட்டப்படும் அவரது புகைப்படத்தை மட்டுமே தான் பார்த்து வருவதாகவும் அவர் கூறினார்.

யாழ் மாவட்டம் உடுப்பிட்டியில் தற்போது தனது மற்ற வாரிசுகளுடன் வசித்துவரும் மகேஸ்வரி அம்மையார், சாந்தன் தனது பள்ளிப் படிப்பை முடித்தபிறகு தந்தையுடன் ஆலோசித்து வெளிநாடு செல்ல முயன்றார் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தனது கணவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டதால், சாந்தன் என்ன காரணத்திற்காக தமிழ்நாட்டுக்குச் சென்றார் என்பது குறித்த முழு தகவல்களும் அவருக்கு மட்டுமே தெரியும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமரின் மரணத்தில் தனது மகனும் தொடர்பு பட்டிருந்தார் எனும் தகவல் தனக்கு திடீரென்று தெரியவந்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது என்றும் கூறினார்.

ராஜீவ் கொலையுடன் தொடர்பா?

ராஜீவ் காந்தி கொலையுடன் அவர் எப்படி தொடர்புபட்டார் என்பதை இன்னும் தன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக தனது மகனை நினைத்து பிரார்த்தனைகள் மற்றும் உபவாசங்களை கடைபிடித்து ஆலயங்களுக்கு செல்வதை மட்டுமே வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Image caption சாந்தனின் தாயார் தில்லையம்பலம் மகேஸ்வரியின் இல்லம்

இறைவனின் அருளால் மட்டுமே தனது மகனுக்கு சிறையிலிருந்து விடுதலை கிடைக்க வழி ஏற்படுமென தான் தொடர்ந்து நம்பி வந்ததாகவும் கூறினார் தில்லையம்பலம் மகேஸ்வரி.

பொருளாதார நெருக்கடி காரணமாக தங்களால் இந்தியா சென்று சாந்தனை பாக்கக் கூடிய முடியவில்லை என்றும், சிறையில் இருபது வருடங்களுக்கும் மேலாக இருக்கும் அவருடன் கடிதத் தொடர்புகூட தமக்கோ, தமது குடும்ப உறுப்பினர்களுக்கோ இல்லை என்றும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தான் அறிந்தவரை சாந்தனுக்கு விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு இருந்ததாகத் தெரியவில்லை என்று கூறிய அவர், கடந்த 25 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் உட்பட எவரும் தங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்றும் கூறினார்.

அதேபோல் இந்த வழக்கில் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருக்கும் மற்றொரு இலங்கைத் தமிழரான முருகன் குடும்பத்தாருடன் தமக்கோ தனது குடும்ப உறுப்பினர்களுக்கோ எவ்விதத் தொடர்புகளும் இல்லை எனவும் தில்லையம்பலம் மகேஸ்வரி அம்மையார் தெரிவித்தார்.

வாழ்வில் தனக்கு இருக்கும் ஒரே ஆசை தனது மகன் சாந்தனை நேரில் சந்திக்க வேண்டும் என்பது மட்டுமே என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.