இலங்கைப் பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு : தென்னாப்ரிக்கா

படத்தின் காப்புரிமை gov.za
Image caption தென்னாப்ரிகாவின் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு ஒத்துழைப்புக்கான துணை அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம்

இலங்கையில் நிலவும் உள்நாட்டுப் பிரச்சினைகள் அங்குள்ள மக்களாலேயே பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்று தென் ஆப்ரிக்கா தெரிவித்துள்ளது.

உள்நாட்டுப் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக இலங்கை அரச தரப்பு குழுவொன்று தென்னாப்ரிக்காவுக்கு பயணமாகியுள்ள வேளையிலேயே, அதன் துணை வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் இக்கருத்தை பிபிசி தமிழோசையிடம் தெரிவித்த்தார்.

இலங்கைப் பிரச்சினையை அங்குள்ள மக்களே பேசித் தீர்ப்பார்கள் என்று தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் பங்குபெறச் சென்றிருந்த தென்னாப்ரிக்க அதிபர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து பேசியிருந்தார் என்றும், அதன்போது இருதரப்பும் தென்னாப்ரிக்கா வந்து அனுபவங்களை பெற்றுக் கொள்ள விரும்பினர் என்றும் இப்ராஹிம் இப்ராஹிம் கூறினார்.

இதையடுத்தே அமைச்சர் நிமால் ஸ்ரீபால டிசில்வா தலைமையிலான குழுவினர் புதனிகிழமை இலங்கையிலிருந்து தென் ஆப்ரிக்கா பயணமாயினர்.

இக்குழுவில் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, துணை அமைச்சர் ஃபைசர் முஸ்தஃபா உட்பட பலர் இடம்பெற்றுள்ளனர்.

அரச குழுவைப் போலவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் விரைவில் தென் ஆப்ரிக்கா வரவுள்ளதாக அமைச்சர் இப்ராஹிம் இப்ராஹிம் தெரிவித்தார்.

"அரசியல் தீர்வு அவசியம்"

Image caption இருதரப்பிடமும் இணக்கப்பாடு குறித்து தென்னாப்ரிக்கா பேசவுள்ளது.

இருதரப்பினரும் தென்னாப்ரிக்காவில் நிலவிய அரசியல் பிரச்சினைகள் எப்படித் தீர்க்கப்பட்டன என்று அறிந்துகொள்ள ஆர்வமாக உள்ளனர் என்றும், தமது அனுபவங்களை உள்நாட்டில் எப்படி செயல்படுத்த முடியும் என்றும் அவர்கள் ஆராய்வார்கள் என்றும் தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.

எனினும் தமது நாட்டில் ஏற்பட்டது போல ஏன் இன்னும் அரசுக்கும் தமிழ்த் தரப்புக்கும் இடையே இணக்கப்பாடு ஏற்படவில்லை என்பதை தாங்கள் தெரிந்து கொள்ள விரும்புகிறோம் எனக் கூறும் இப்ராஹிம் இப்ராஹிம், அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படாமால் இணக்கப்பாட்டால் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்பதையும் தென்னாப்ரிக்கா, இலங்கை அரசு மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எடுத்துச் சொல்லும் எனவும் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

ஜெனீவாவில் ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், எதிர்வரும் மார்ச் மாதம் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பில் கொண்டுவரவுள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் குறித்து தாங்கள் அறிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.