ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கூட்டு மீன்பிடித் தொழில்: இந்தியாவுக்கு இலங்கையின் தீர்வு

படத்தின் காப்புரிமை AFP
Image caption இந்திய மீனவர்களுக்கு வேறு ஆழ்கடல் பிராந்தியத்திற்குள் செல்வதில் பெரும் பிரச்சனை உள்ளது: இலங்கை அமைச்சர்

இந்திய மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக இலங்கை- இந்திய மீனவர்கள் இருநாட்டு கடற்பரப்புக்குள் தடையின்றி மீன்பிடிக்கக்கூடிய கூட்டுத் தொழில்முறை ஒன்று பற்றி ஆராய தயாராக இருப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இந்திய மீனவர்களை வேறு ஆழ்கடல் பிராந்தியத்திற்கு அனுப்புவதில் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சனைக்கு இந்த கூட்டுத் தொழில்முறை தீர்வாக அமையும் என்று இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இலங்கை மீனவர்களை பாதிக்காத விதத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து தடையின்றி மீன்பிடித்துச் செல்வதற்கு இதன்மூலம் வழியேற்படும்.

அதேபோல, இலங்கை மீனவர்களும் இந்திய கடற்பரப்புக்குள் சென்று மீன்பிடித்துவர வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன.

இந்திய மீனவர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுத்துவந்து இலங்கையின் கடல்வளங்களை சுரண்டிச் செல்வதாக மீனவர் அமைப்புகளும் இலங்கை அரசும் நீண்டகாலமாக வாதிட்டுவருகின்றன.

இந்த சூழ்நிலையில், இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்புக்குள் வந்துசெல்வதற்கு வசதியளிக்கக்கூடிய இருதரப்பு கூட்டுத் தொழில்முறை இலங்கை மீனவர்களை மேலும் பாதிக்காதா என்று தமிழோசை அமைச்சரிடம் வினவியது.

'அப்படி பாதிப்பு இருக்கின்ற காரணத்தினால் தான் இப்போது அப்படியாக அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை கைதுசெய்துவருகிறோம். இப்படியான கூட்டுத் தொழில் முறை ஒன்று உருவாகுமானால் இப்படியான பாதிப்புகள் பற்றியும் இருதரப்பும் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும்' என்று பதிலளித்தார் அமைச்சர்.

'இந்தியா தயார்- இலங்கை தான் தயக்கம் காட்டியது'

Image caption சென்னை சந்திப்பு (அடுத்த பேச்சுவார்த்தை மார்ச் முதல் வாரத்தில் கொழும்பில் நடக்கும்)

'இரண்டு நாடுகளுக்கும் நன்மை ஏற்படக்கூடிய விதத்தில் ஒரு நடைமுறையை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்' என்றும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் கூறினார்.

இருநாட்டு மீனவர்கள் இடையே அடுத்த மாதம் முதல் வாரத்தில் கொழும்பில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்றும் ராஜித்த சேனாரத்ன கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, வேறு கடல்பரப்புக்குச் செல்வதில் இந்திய மீனவர்களுக்கு பிரச்சனைகள் இருப்பதாக இந்தியத் தரப்பினர் கூறினால், குறித்த 'கூட்டுத்தொழில் நடைமுறை' பற்றிய தெரிவை இந்தியாவுக்கு ஒரு தீர்வாக இலங்கை முன்வைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அதேநேரம், பொட்டம் ட்ரோலிங்-அதாவது ஆழ்கடலில் தரையைத் துளாவி மீன்பிடிக்கும் தொழில்முறை போன்ற சட்டவிரோத மீன்பிடி முறைகளை இலங்கை அனுமதிக்காது என்றும் அமைச்சர் கூறினார்.

இவ்வாறான கூட்டு மீன்பிடித் தொழில் நடைமுறை ஒன்றுக்குத் தயாராகவே இந்திய அரசு இருக்கின்றது என்றும், ஆயிரக்கணக்கான இந்திய மீனவர்களின் படையெடுப்பு காரணமாக இலங்கையே அந்தத் தீர்வில் நாட்டமின்றி இருந்துவந்தது என்றும் அமைச்சர் சேனாரத்ன கூறினார்.

இதேவேளை, இந்து சமுத்திரத்தில் 47 சதவீதமான மீன்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளாலேயே பிடித்துச் செல்லப்படுவதாகவும் அவற்றால் இந்து சமுத்திர நாடுகளுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை என்று இலங்கை கூறுகிறது.

அதனாலேயே இந்து சமுத்திரத்தில் இலங்கை கடற்பரப்புக்கு வெளியே, மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் வெளிநாட்டுக் கப்பல்களை இலங்கைக்கு வரவழைத்து, கொழும்புக்கு அருகே உள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் ஏற்றுமதி செய்வதற்கான முதலீட்டு ஒப்பந்தங்களை இலங்கை செய்துகொண்டுள்ளதாக அமைச்சர் ராஜித்த தெரிவித்தார்.