இலங்கையில் வறட்சி காரணமாக நெல் விளைச்சல் வீழ்ச்சி

Image caption மழை நீரை நம்பியிருக்கும் மேட்டுநில வேளாண்மைச் செய்கைகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன

இலங்கையில் நிலவும் வறட்சியினால் இம்முறை பெரும்போக நெல் வேளாண்மை செய்கையில் 35 சத வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் மூலம் தெரியவருகின்றது.

தேசிய நெல் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள இந்த வீழ்ச்சி காரணமாக அரிசி விலையும் அதிகரிக்கக் கூடும் என்று விவசாய அமைச்சு கூறுகின்றது.

தற்போது நிலவும் வறட்சி நிலை காரணமாக அதிக நெல் விளைச்சலை தரும் மாவட்டங்களான அம்பாறை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது சாகுபடி முடிவடையும் நிலையிலுள்ள பெரும்போக நெல் வேளாண்மை செய்கையில் வீழ்ச்சி காணப்பட்டாலும் சில மாதங்களுக்குத் தேவையான நெல் கையிருப்பு அரச களஞ்சியங்களில் இருப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.டி.வி. மீகஹாமுல்ல தெரிவித்திருக்கின்றார்.

எனினும், அரிசி விலையை தீர்மானிப்பவர்களாக அரிசி ஆலைகளின் உரிமையாளர்களே இருப்பதாகவும், அரிசி விலையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என அமைச்சு எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Image caption அரிசி விலையும் அதிகரிக்கக்கூடும்

அரிசி விலையை அரிசி ஆலைகளின் உரிமையாளர்களே தீர்மானிப்பதாக கூறப்படுவதை நிராகரித்துள்ள அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள், அரிசி விலை அதிகரிப்பு என்பது அரசாங்கத்தின் கைகளிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த ஆண்டு அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியங்களில் வைக்கப்பட்டுள்ள நெல் கையிருப்புகள் அரசியல் செல்வாக்குகள் இன்றி அரிசி ஆலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டால் அரிசி விலை உயர்வை தடுக்கு முடியம் என்று அரிசி ஆலையொன்றின் உரிமையாளரான எம்.எஸ்.எம். ஹாரிஸ் கூறினார்.

இதனிடையே, அம்பாறை மாவட்டத்தில் வறட்சி நிலவினாலும் நீர்ப்பாசனத்தை நம்பியிருக்கும் தாழ்நில வேளாண்மை செய்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் குளங்களிலிருந்து நீர் கிடைத்ததால் அமோக விளைச்சலை தாம் இம்முறை பெற முடிந்ததாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மழைநீரை முழுமையாக நம்பியிருக்கும் மேட்டு நிலங்களில் வேளாண்மை செய்கையில் ஈடுபட்ட விவசாயிகளுக்கே வறட்சியினால் இழப்புகள் அதிகம் என்று உள்ளுர் விவசாய அமைப்பொன்றின் தலைவரான எம்.ஐ.எம் அபுபக்கர் தெரிவித்தார்.

எனினும், உள்ளுர் சந்தையில் தற்போதைய நிலவரத்தின் படி அரிசி விலை இன்னும் அதிகரிக்கவில்லை. தற்போது நடக்கும் பெரும்போக வேளாண்மை சாகுபடி முடிந்த பின்னர் அரசி விலை சற்று அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.