வனத்துறை காணிகளில் அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்ற நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத குடியேற்றங்களில் ஒன்று (ஆவணப்படம்)
Image caption சட்டவிரோத குடியேற்றங்களில் ஒன்று (ஆவணப்படம்)

மட்டக்களப்பு மாவட்டம் புனானையிலுள்ள வனத்துறை காணிகளில் அத்துமீறி குடியேறியிருப்பவர்களை காவல்துறை உதவியுடன் வெளியேற்றுமாறு வாழைச்சேனை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாழைச்சேனை பிரதேச வனத்துறை அதிகாரிக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ள நீதிமன்றம், இதன் நிறைவேற்றம் குறித்து மார்ச் மாதம் 24ஆம் தேதி தன்னிடம் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

புனானைப் பகுதியிலுள்ள வனத்துறைக்கு சொந்தமான காணிகளில் வெளி மாவட்டத்தை சேர்ந்த சிங்களவர்கள் அத்துமீறி குடியேறி வருவதாக தொடர்ந்து புகார் கூறப்பட்டு வருகிறது.

வனத்துறையின் காணிகளில் அத்துமீறி குடியேறியிருப்பவர்களை வெளியேற்றுவதற்காக அங்கு சென்றிருந்த வனத்துறை அதிகாரிகளை அந்த சட்டவிரோத குடியேறிகள் அச்சுறுத்தியதாகவும் புகார்கள் கூறப்பட்டன.

இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வாழைச்சேனை பிரதேச வனத்துறை அதிகாரி அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். அதில் வனத்துறை நிலத்தில் அத்துமீறி குடியேறியிருப்பவர்களை வெளியேற்றுவதற்கு காவல்துறையின் உதவி தேவைப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட வாழைச்சேனை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், வனத்துறை அதிகாரிகளுக்கு காவல்துறை உதவவேண்டும் என்று வாழைச்சேனை உதவி காவல்துறை அத்தியட்சகருக்கு கட்டளை ஒன்றையும் பிறப்பித்துள்ளது.

புனானை பகுதியின் வனத்துறை காணிகளில் நடப்பதாக கூறப்படும் அத்துமீறிய குடியேற்றங்களின் பின்னணியில் அங்குள்ள இராணுவமும் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தொடர்ந்தும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றார். ஆனால் இலங்கை ராணுவம் இவரது இந்த குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்து வந்திருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.