"இலங்கை அரசுக்கு எதிரானவர் நவநீதம் பிள்ளை"

நவநீதம் பிள்ளை படத்தின் காப்புரிமை AP
Image caption நவநீதம் பிள்ளை

எதிர்வரும் மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ள ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தொடரில் இலங்கை சம்பந்தமாக ஐநா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், அவர் கொடுத்துள்ள பரிந்துரைகள், எதேச்சதிகாரம் மிக்கவையாகவும், இலங்கையின் இறையாண்மையைப் பாதிப்பதாகவும், அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் அமைந்திருப்பதாகக் கூறி நவி பிள்ளையின் கூற்றுக்களை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.

இலங்கையில் யுத்த காலத்தில் நடந்ததாகத் தெரிவிக்கப்படும் போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட சர்வதேச சட்ட விதி மீறல்கள் போன்றவை சுயாதீனமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை மூலமாக விசாரிக்கப்பட வேண்டும் என ஆணையாளர் நவி பரிந்துரைத்திருந்தார்.

ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கூற்றுக்களும் பரிந்துரைகளும் தவறான மற்றும் ஆதாரமற்ற தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டவை என்று இலங்கை அரசு வாதிட்டுள்ளது.

நவநீதம் பிள்ளை இலங்கைக்கு எதிராக கொண்டுள்ள மனப்பாங்கையும், பக்கச்சார்பையும் பிரதிபலிப்பதாக அவருடைய முடிவுகளும் பரிந்துரைகளும் அமைந்திருப்பதாக இலங்கை அரசு குற்றம்சாட்டுகிறது

சுயாதீனமான சர்வதேச விசாரணை வேண்டும் என்ற ஐநா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரை, இலங்கைக்கு எதிராக தொடர்ந்து அவர் முன்னெடுக்கும் முயற்சிகளையே எடுத்துக்காட்டுவதாகவும், இலங்கைக்கு எதிரான சர்வதேச ஆணையாளரின் செயல்திட்டத்தினால் சர்வதேச சமூகம் தவறாக வழிநடத்தப்பட்டுவிடக்கூடாது என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் யுத்த காலத்து குற்றங்களுக்கான பொறுப்புகூறல் தொடர்பில் பல்வேறு பொறிமுறைகள் செயல்பட்டு வருவதாகவும், அவை சுயாதீனமாகவும் நம்பகத்தன்மையுடனும் செயல்படவில்லை என்று ஐநா மனித உரிமை ஆணையாளர் குற்றம்சாட்டுவது ஆதாரமற்றது என்றும் இலங்கை அரசு வாதிட்டுள்ளது.

இலங்கையில் உண்மை, நீதியையும் நிலைநாட்டுவது, பாதிப்புகளை நிவர்த்தி செய்வது, எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பது போன்ற விஷயங்களில் ஐநாவின் விசேட பொறிமுறைகளுடன் இலங்கை அரசு நன்கு ஒத்துழைத்து வந்துள்ளதாக அரசாங்கத்தின் பதிலில் கூறப்பட்டுள்ளது.

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் கொண்டுவர உள்நாட்டு அளவிலேயே பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு உயர்பாதுகாப்பு வலயங்களாக இருந்த பல இடங்கள் இப்போது மக்கள் குடியேற்றத்துக்கான இடங்களாக மாறிவிட்டதாகவும், சிவிலியன்களுடைய சொத்துக்கள் சிலவற்றில் இராணுவத்தினர் இருந்தாலும் அவையெல்லாம் கடந்த இருபது இருபத்தைந்து வருடங்களாக ஆட்புழக்கம் இல்லாமல் இருந்த இடங்கள் என்றும், சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொறுப்பு யுத்தம் முடிந்த பின்னர் இராணுவத்தின் கைகளில் இருந்து பொலிசாரிடம் கைமாற்றப்பட்டுள்ளது என்றும் தனது பதிலில் இலங்கை அரசு குறிப்பிட்டுள்ளது.

குற்றச் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு அளிப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கான வேலைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளித்து சமூகத்தில் இணைய வைப்பதிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக அது கூறுகிறது.

இலங்கையில் மதச் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் கூறுவது தவறு என்றும், இலங்கையில் மத சுதந்திரம் அரசியல் சாசன ரீதியாக உறுதிசெய்யப்பட்டுள்ளது எனவும், இந்த உரிமை மீறப்படுவதாக ஆதாரங்களுடன் கூடிய குற்றச்சாட்டுகள் வரும்போது அவை உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.