இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர்: ததேகூ விவாதம்

யாழ்ப்பாண கூட்டத்தில் கூட்டணியின் தலைவர் சம்பந்தனும், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் விவாதிக்கின்றனர்.
Image caption யாழ்ப்பாண கூட்டத்தில் கூட்டணியின் தலைவர் சம்பந்தனும், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் விவாதிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதற்கான திட்டம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் களைந்து அதனை முன்னெடுப்பதற்கு வடமாகாண முதலமைச்சர் தலைமையில் ஆசிய அவிவிருத்தி வங்கியுடன் நேரடியாகப் பேச்சுக்கள் நடத்துவது என்று வியாழனன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உயர் மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் விநியோகிப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள திட்டத்திற்கு கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் முழு அளவில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாவட்டத்தின் பெரிய நீர்ப்பாசனக் குளமாகிய இந்தக் குளத்தைப் புனரமைத்து, அதன் அணைக்கட்டை உயர்த்தி மேலதிக நீரைச் சேமித்து, யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

"எனினும் இந்தக் குளத்தில் இருந்து ஆயிரக்கான ஏக்கர் வயல்காணிகளுக்கு இன்னும் நீர்ப்பாசன வசதிகள் செய்து தரப்படவில்லை. அவற்றுக்கான நீரை வழங்குவது தொடர்பில் அதிகாரிகள் இன்னும் நடவடிக்கை எடுக்கவுமில்லை. அத்துடன் சிறுபோக நெற்செய்கையின்போது, மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வயல்களுக்கு நீர் கிடைக்கின்றது. எனவே, இந்த நிலையில் இந்தக் குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்க அனுமதிக்கப் போவதில்லை" என்று கிளிநொச்சி விவசாயிகள் கூறுகின்றனர்.

Image caption வன்னி விவசாயிகளின் நீர்ப்பாசன ஆதாரமாக இரணைமடு குளம் விளங்குகிறது.

இதனால் இழுபறி நிலையில் உள்ள இரணைமடு குளத்து குடிநீர்த் திட்டம் தொடர்பில் நிபுணர் குழுவொன்று வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்டு, அதன் அறிக்கை வியாழனன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு, விவசாயிகளைப் பாதிக்காத வகையிலும், இந்தத் திட்டத்திற்கான நிதி திரும்பிச் செல்லாத வகையிலும், மாற்றுத் திட்டங்களையும் சேர்த்து, இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் தலைமையில் குழு அமைத்து ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பேச்சுக்கள் நடத்துவது என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.

இந்தத் தீர்மானம் குறித்து கருத்து வெளியிட்ட இரணைமடு கமக்கார் அமைப்புக்களின் சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன், விவசாயிகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட விடமாட்டோம் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தங்களிடம் உறுதியளித்திருப்பதை உறுதிப்படுத்தினார்.

எனினும் அவர்கள் தெரிவித்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைத் தாங்கள் கேட்டுக் கொண்டதாகவும், எனினும், அதில் தங்களுக்குப் பூரண திருப்தி ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

"வெறும் உறுதிமொழிகளை நம்பி நாங்கள் எந்த ஆவணத்திலும் இந்தத் திட்டம் தொடர்பில் கையெழுத்து வைக்கப்போவதில்லை. இரணைமடு குளத்தைப் புனரமைத்து, எங்களுடைய வயல் நிலங்களுக்குத் தேவையான நீரைத் தருவதற்கான நடவடிக்கைகளை முதலில் எடுங்கள். அடுத்த கட்டமாக ஏனைய விடயங்கள் பற்றி தீர்மானிப்போம். அதுவரையில் இரணைமடு குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குளத்திலோ அல்லது கிளிநொச்சி மாவட்டதிற்குள்ளேயோ மேற்கொள்ளக் கூடாது என்று நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்திருக்கின்றோம்" என இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் கூறினார்.