வடமாகாண தலைநகராக மாங்குளம் - டெலோ தீர்மானம்

இலங்கையின் வடமாகாணத்தின் தலைநகராக மாங்குளத்தை அறிவிக்க வேண்டும் என்று டெலோ அமைப்பு தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட அந்த அமைப்பின் மாகாண சபை அங்கத்தவரும், மூத்த உறுப்பினருமான சிவாஜிலிங்கம் அவர்கள், மக்களின் நலன் கருதியே இந்த முடிவை தமது அமைப்பு எடுத்துள்ளதாகக் கூறினார்.

வடமாகாணத்தின் 5 மாவட்டங்களான, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றின் மையமாக மாங்குளம் அமைந்துள்ளதாலேயே தாம் இந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறினார்.

தமது கட்சியின் இந்த முடிவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும், வடமாகாண முதல்வரினதும் ஆதரவைத் தேடப் போவதாகவும் தெரிவித்த அவர், இப்படியான ஒரு விருப்பத்தை மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களும் ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் கூறினார்.

இலங்கை அரசாங்கமும் இப்படியான ஒரு முடிவை ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அது பின்னர் அதனைக் கைவிட்டு விட்டது என்றும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.